பவன் கல்யாண் புதிய கட்சி தொடங்கினார்: காங்கிரசுக்கு எதிராக களம் இறங்க திட்டம்
ஹைதராபாத்: மத்திய அமைச்சரும், பிரபல நடிகருமான சிரஞ்சீவியின் தம்பியான நடிகர் பவன்கல்யாண் 'ஜனசேனா' என்ற புதிய கட்சியை நேற்று தொடங்கினார். ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரமாண்ட தொடக்கவிழாவில் தனது கட்சி கொடியை பவன்கல்யாண் அறிமுகம் செய்தார்.
ஆந்திர மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் லோக்சபா தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் கே.கல்யாண் குமார் என்ற பவன் கல்யாண். இவர் பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு செல்வாக்கை ஏற்படுத்தி இருக்கிறார்.
இவர் மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவியின் இளைய சகோதரர் ஆவார். சிரஞ்சீவி, 2008ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் கட்சியை தொடங்கியபோது பவன் கல்யாண் அதில் இளைஞர் அணி தலைவராக இருந்து ஆந்திராவில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரசை எதிர்த்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் சில வருடங்களில் சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்து ராஜ்யசபா எம்.பி.யாகி, மத்திய அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். கட்சியை காங்கிரசுடன் இணைத்ததற்கு பவன் கல்யாண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே இருந்த உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது.
அதற்கு பின் பவன் கல்யாண் சினிமா பக்கமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வந்தார்.

பவன் கல்யாண் அரசியல்
இந்த நிலையில் நேற்று ‘ஜனசேவா' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2007-ம் ஆண்டே பவன் கல்யாண், ‘சாதாரண மக்களின் பாதுகாப்பு படை' என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன் என்று அறிவித்தார். இதற்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 கோடியை ஒதுக்கினார். பின்னர் அது தொடர்ந்து செயல்படவில்லை என்றாலும் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி தொடங்கியபோது அதில் முக்கிய பங்காற்றினார். இப்போது தனியாக ஜனசேவா கட்சியை தொடங்கியுள்ளார்.

மக்கள் படை
ஜனசேனா என்பதற்கு மக்கள் படை என்று பொருள். கட்சியின் சின்னமாக வட்டத்துக்குள் 6 நட்சத்திரங்கள் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்கள் பின்னணியில் உள்ளது.

அமைதியும், புரட்சியும்
வெள்ளை நிறம் அமைதியையும், சிவப்பு நிறம் புரட்சியையும் குறிப்பதாகவும், 6 நட்சத்திரங்கள் கட்சியின் கொள்கைகளை குறிப்பதாகவும் அவர் கூறினார். இது நாட்டின் படை (சேனை), சாதாரண மக்களின் படை என்றும் பவன் கல்யாண் கூறினார்.

காங்கிரசை விரட்ட வேண்டும்
நேற்றைய கட்சி அறிமுக விழாவில் பேசிய பவன் கல்யாண், தனது பேச்சில் முழுக்க காங்கிரசுக்கு எதிரான கருத்துக்களை கூறினார். ஆந்திராவை பற்றி தெரியாத காங்கிரஸ் தலைவர்கள் சிதம்பரம், வீரப்பமொய்லி, அகமதுபடேல் ஆகியோர் தெலுங்கு மக்களை பிரித்து விட்டார்கள் என்று கூறிய அவர் காங்கிரசை இந்த நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

தெலுங்கான பிரச்சினை
சினிமா நடிகராக இருந்தே எனக்கே தெலுங்கானாவில் என்ன நடக்கிறது, அவர்களுக்கு என்ன தேவை என்று தெரியும்போது பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு தெரியாமல் போனது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர் மாநிலத்தை பிரித்தவிதம் சரியில்லை. ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மாநில பிரிவினையை கொண்டாட முடியாத சூழ்நிலையை காங்கிரஸ் உருவாக்கி விட்டது என்று கடுமையாக சாடினார்.

அண்ணனை விமர்சிக்கவில்லை
தன்னை விமர்சித்த ஒவ்வொரு காங்கிரஸ் தலைவருக்கும் தனது உரையில் பதில் அளித்த பவன் கல்யாண் தனது அண்ணன் சிரஞ்சீவியை மட்டும் விமர்சிக்கவில்லை.
இதுபற்றி அவர் கூறும் போது, ‘‘அப்பாவுக்கு பிறகு எனது அண்ணனை தந்தையாக மதிக்கிறேன். அவருக்கு எதிராக நான் அரசியலுக்கு வரவில்லை. காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு எதிராகத் தான் கட்சியை தொடஙகி உள்ளேன். எனது துரதிருஷ்டம் எனது அண்ணன் காங்கிரசில் இருப்பதால் அவருக்கு எதிராக உள்ளேன்‘‘ என்றார்.

வாக்குகள் சிதற வாய்ப்பு
நடிகர் பவன்கல்யாண் புதிய கட்சி தொடங்கியுள்ளது, ஜெகன்மோகன் ரெட்டி, கிரண்குமார் ரெட்டி, சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஏனெனில் இவர்கள் மூவருமே காங்கிரசுக்கு எதிராக தங்கள் பிரசாரத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறார்கள். இப்போது நடிகர் பவன்கல்யாணும் காங்கிரசுக்கு எதிராக களம் இறங்குவதால் தங்களின் வாக்கு வங்கி சிதறுமோ என அச்சம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











