இப்படி பண்ணா வளரவே மாட்டீங்க.. FEFSI கண்டிப்பா முடிவை மாத்தித்தான் ஆகணும்.. பவன் கல்யாண் பளிச்!
ஹைதராபாத்: சமுத்திரகனி இயக்கி நடித்த வினோதய சித்தம் திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் Bro எனும் பெயரில் உருவாகி உள்ளது. சமீபத்தில், நடந்த அந்த பட விழாவில் நடிகர் பவன் கல்யாண் தென்னிந்திய திரைப்பட சங்கமான FEFSI-ன் சமீபத்திய முடிவை மாற்றும் படி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அந்த காலம் முதல் தற்போது வரை ஏகப்பட்ட வெளிமாநில நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி வரும் நிலையில், திடீரென ஃபெப்சி அமைப்பு தமிழ் நடிகர்கள் மட்டுமே தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்றும் தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்கள் மட்டுமே தமிழ் படங்களில் பணியாற்ற வேண்டும் என்றும் பிற மாநிலங்களில் ஷூட்டிங் நடத்தக்கூடாது உள்ளிட்ட பல கண்டிஷன்களை போட்டு இருந்தனர்.
தமிழ் சினிமாவில் நடிக்கும் பல நடிகர்களுக்கே இதில், உடன்பாடு இல்லாத நிலையில், டோலிவுட்டின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் தனது எதிர்ப்பை ப்ரோ படத்தின் நிகழ்ச்சியில் பதிவு செய்துள்ளார்.

சினிமாவுக்கு எல்லை கிடையாது: சினிமா எனும் கலையை ஒரு எல்லைக்குள் அடைத்து வைக்கக் கூடாது என்பது தான் பான் இந்தியா கலாச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. விஜய்யின் லியோ படத்திலும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் பல்வேறு மொழியில் திறமை வாய்ந்த முன்னணி நடிகர்கள் நடித்து வரும் நிலையில், இப்படியொரு சிக்கலான அணுகுமுறையை தென்னிந்திய திரைப்பட சங்கம் கைவிட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்நிலையில், சமுத்திரகனியின் வினோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ள நடிகர் பவன் கல்யாண் அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது, இப்படி செய்தால், உங்கள் துறை வளர்ச்சி அடையாது என்றே கூறியுள்ளார்.
பவன் கல்யாண் சொன்னது என்ன?: FEFSI அமைப்புக்கு என் அன்பார்ந்த கோரிக்கையை முன் வைக்கிறேன். தமிழ் நடிகர்கள் மற்றும் தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டுமே தமிழ் படங்களில் பயன்படுத்த வேண்டும் என்கிற முடிவை நீங்கள் கை விட வேண்டும்.
தெலுங்கு திரையுலகம் தற்போது ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை செய்து வரக் காரணமே பான் இந்தியா கான்செப்ட் தான். தெலுங்கு சினிமா வளர்ச்சியடைய காரணமே இங்கே தமிழ்நாட்டில் இருந்தும், கேரளாவில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் பாலிவுட்டில் இருந்தும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி வருவதால் தான்.
வளர்ச்சியடைய முடியாது: அதனை விடுத்து குறுகிய வட்டத்தில் சிந்திக்கும் விதமாக நீங்கள் செயல் ஆற்றினால், நிச்சயம் உங்களது சினிமாத்துறை வளர்ச்சியடையவே முடியாது. கேரளாவில் இருந்து சுஜித்தையும், இந்தியில் இருந்து ஊர்வசி ரவுத்தேலாவையும், பாகிஸ்தானில் இருந்து நீத்து லுல்லாவையும் ஒன்றாக நடிக்க வைப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது என்றார்.
மேலும், மணிரத்னத்தின் ரோஜா, ஷங்கரின் ஜென்டில்மேன் உள்ளிட்ட படங்கள் தெலுங்கு தயாரிப்பாளரான ஏ.எம். ரத்னம் இல்லாமல் எப்படி சாத்தியமாகி இருக்கும். தமிழ் சினிமா துறையில் ஏதாவது பிரச்சனை இருந்தால், அதனை கூடிப் பேசி சரி செய்துக் கொள்ளலாம். பெரிய மனதுடன் நீங்கள் கொண்டு வந்திருக்கும் இந்த அதிரடி முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என பவன் கல்யாண் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











