சந்திக்கலாம் என்று இருந்தேன்.. அவர் ஒத்துக்கொள்ளவே இல்லை.. ஹுசைனியிடம் பயிற்சி பெற்ற பவன் கல்யாண்
சென்னை: ஷிஹான் ஹுசைனி இரத்த புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக வில்வித்தை சங்கத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அவர் பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு கராத்தே பயிற்சி அளித்தவர் என்பதும்; பல படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நடிகரும், ஆந்திராவின் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் உருக்கத்துடன் பேசியிருக்கிறார்.
புன்னகை மன்னன் திரைப்படத்தில் அறிமுகமான ஷிஹான் ஹுசைனி விஜய் நடித்த பத்ரி படத்தின் மூலம் ஓரளவுக்கு திரைத்துறையில் பிரபலமானார். இதற்கிடையே அவர் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிப்பை தாண்டி கராத்தே மாஸ்டராக அவர் படு பிரபல்யமடைந்தார். அவர் விஜய், பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கும் கராத்தே பயிற்சி அளித்தார். கடைசியாக அவர் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.

இரத்த புற்றுநோய்: சூழல் இப்படி இருக்க அவர் சில வாரங்களுக்கு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் தனக்கு இரத்த புற்றுநோய் இருப்பதாகவும்; இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிரோடு இருப்பேன்; ஒரு நாள் வாழ்வதற்கே இரண்டு யூனிட் ரத்தம் வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தன்னிடம் பயிற்சி பெற்ற பவன் கல்யாணுக்கு, 'தன்னுடைய கராத்தே பயிற்சி சொல்லிக்கொடுக்கும் இடத்தை விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும்' என்று கோரிக்கையும் வைத்தார் ஹுசைனி.
மரணமடைந்த ஹுசைனி: ஆனால் அவர் உயிரோடு இருக்கும்வரை விஜய், பவன் கல்யாண் உள்ளிட்டோர் நேரில் வந்தும் சந்திக்கவில்லை; அவரது கோரிக்கை குறித்து பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் ஹுசைனி இன்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது அவரின் உடல் அஞ்சலிக்காக வில்வித்தை சங்கத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.
பவன் கல்யாண் அறிக்கை: நிலவரம் இப்படி இருக்க பவன் கல்யாண் உருக்கத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தற்காப்பு கலை ஆசிரியரான ஹுசைனியின் மரணம் வேதனை அளிக்கிறது. ஹுசைனி மரணமடைந்தார் என்கிற செய்தியை அறிந்து நான் ரொம்பவே மனவேதனை அடைந்தேன். நான் அவரிடம்தான் கராத்தே பயிற்சி பெற்றேன். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்பது நான்கு நாட்களுக்கு முன்னர்தான் எனக்கு தெரிந்தது. சென்னையில் இருக்கும் எனது நண்பர்களை தொடர்புகொண்டு நல்ல சிகிச்சைக்கு அவரை வெளிநாடு அனுப்ப வேண்டுமென்றால் அதை செய்ய தயாராக இருப்பதாக கூறினேன்.

சந்திக்கலாம் என்று இருந்தேன்: இந்த மாதம் 29ஆம் தேதி சென்னை சென்று அவரை சந்திக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் இப்போது அவரது இறப்பு செய்தி வேதனையை கொடுத்திருக்கிறது. ஹுசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். அவர் கடுமையான விதிமுறைகளுடன் கராத்தே சொல்லிக்கொடுத்தார். அவரை முழுமையாக பின்பற்றுவேன். முதலில் எனக்கு கராத்தே சொல்லிக்கொடுக்க அவர் ஒத்துக்கொள்ளவில்லை. பயிற்சி அளிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் பலமுறை அவரை விடாமுயற்சியோடு சந்தித்து கோரிக்கை வைத்து சம்மதம் வாங்கிவிட்டேன்.
அவ்வளவு உதவின: அவரிடம் நான் கற்றுக்கொண்ட கராத்தே தம்முடு படத்தில் நடிப்பதற்கு பெரிதாக உதவின. அவரது பயிற்சியின் கீழ் மூவாயிரம் பேர் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வில்வித்தையை பிரபலமாக்குவதற்கு பாடுபட்டார். அவரது திறமைகள் கராத்தே, வில்வித்தையோடு மட்டும் நின்றுவிடாது. அவர் பன்முக திறமைசாலி. அவர் இசையில் தேர்ச்சி பெற்றிருந்தார். நன்றாக வரைவார், சிலை வடிப்பார், நடிப்பார். அவர் பலருக்கு ஊக்கம் கொடுக்கக்கூடிய பேச்சினை கொடுத்திருக்கிறார். அவர் உரை நிகழ்த்தும்போது என்னையும் உடன் அழைத்து சென்றிருக்கிறார். உடலை தானம் செய்தது அவருடைய நல்ல குணத்தை காட்டுகிறது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்றார்.


Click it and Unblock the Notifications











