நவீன மருத்துவத்தால் உயிருடன் இருக்கிறேன்.. பவன் கல்யாணின் முன்னாள் மனைவி கண்ணீர் பதிவு!
சென்னை: நடிகரும் அரசியல் பிரமுகருமான பவன் கல்யாண் ஆந்திர துணை முதல்வராக உள்ளார். இவரது முன்னாள் மனைவி ரேணு தேசாய் இன்ஸ்டாகிராமில், நவீன மருத்துவத்தால் உயிரோடு இருக்கிறேன் என்று ஒரு பதிவினை போட்டுள்ளார். இதைப்பார்த்த பலர், அவருக்கு ஆறுதல் கூறி என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவை தனது கைக்குள் வைத்து இருக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர்தான் பவன் கல்யாண். இவர் 1996 ஆம் ஆண்டு வெளியான அக்கடா அம்மாயி இக்கட அப்பா படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இதைதொடர்ந்து தோலி பிரேமா, தம்முடு,பத்ரி, மற்றும் குஷி என அடுத்தடுத்த வெற்றிப்படத்தில் நடித்து ஸ்டார் நடிகராக மாறினார். சினிமாவில் படு பிஸியாக இருந்த பவன் கல்யாண். 2014ம் ஆண்டு ஜனசேனா கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். தற்போது பவன் கல்யாண் ஆந்திராவின் துணை முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.

நடிகர் பவன் கல்யாணின் மனைவி: இவர், 1997ம் ஆண்டு நந்தினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து 2007ம் ஆண்டு இவரை பிரிந்தார். இதையடுத்து இரண்டாவதாக ரேணு தேசாயை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு அகிரா நந்தன் மற்றும் ஆத்யா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து, இவர்கள் 2012 ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதைத்தொடர்ந்து 2013ம் ஆண்டு அன்னா லெஷ்னேவா என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார்.
உயிரோடு இருக்கிறேன்: இந்நிலையில், பவன் கல்யாணின் முன்னாள் மனைவியான ரேணு தேசாய் , இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ரேணு தேசாய், தான் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வீடியோவைப் பகிர்ந்து, "நவீன மருந்துகள் உடலை உயிருடன் வைத்திருக்கின்றன" என்று பதிவிட்டுள்ளார். ரேணு தேசாய் கடந்த ஆண்டு முதல் இதய நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதனை அண்மையில் கூறிய ரேணு தேசாய், சில ஆண்டுகளாக நான் இதயம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளால் தவித்து வருகிறேன். எனக்கு நெருக்கமானவர்கள் அனைவருக்கும் இது தெரியும்.
நம்பிக்கையை இழக்காதீர்கள்: வாழ்க்கையில் எது நடந்தாலும் வலுவாக இருக்க வேண்டும், எதுவாக இருந்தாலும் நாம் வலுவாக இருக்க வேண்டும். உங்கள் மீதும் வாழ்க்கை மீதும் நம்பிக்கையை இழக்காதீர்கள். இந்த பிரபஞ்சம் நமக்கானது என்பதை மறந்துவிடாதீர்கள் என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள் வருத்தப்படாதீர்கள், விரைவில் குணமடைவீர்கள் என ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











