உஸ்தாத் பகத் சிங் டீசர் சர்ச்சை..பவன் கல்யாண் படக்குழுவினருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்?
சென்னை: ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில், ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் உஸ்தாத் பகத் சிங் படத்தின் டீசரில் சர்ச்சைக்குரிய வகையில் இடம் பெற்றிருந்த காட்சிக்கு தேர்தல் ஆணையம் படக்குழுவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை நடைபெறவுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கவுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த தேர்தலில், அரசியல் கட்சித் தலைவரான பவன் கல்யாண், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கவுள்ளார்.

பவன் கல்யாண்: இந்த நிலையில், பவன் கல்யாண் நடித்திருக்கும் உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இந்த டீசரில் ஒரு காட்சியில் டீ கிளாஸ் ஒன்று குளோசப்பில் காட்டப்படுவது போல ஒரு காட்சி வருகிறது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் சின்னமான டீ கிளாஸை டீசரில் காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, பவன் கல்யாண் தனது கட்சி சின்னத்தை படத்தின் டீசரில் காட்டியிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
தேர்தல் ஆணையம்: இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திரா தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமார், உஸ்தாத் பகத் சிங் படத்தின் டீசரை நான் இன்னும் பார்க்கவில்லை என்பதால், அதில் நான் கருத்த கூற முடியாது. ஆனால் விளம்பரத்திற்காக டீ கிளாஸை பயன்படுத்தி இருந்தால், அது அரசியல் நோக்கத்திற்கான விளம்பரமாகவே கருதப்படும். இப்படி அரசியல் விளம்பரங்கள் செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. இருப்பினும், அத்தகைய விளம்பரங்களுக்கு முன் அனுமதி அவசியம். அரசியல் விளம்பரம் என்றால் அந்த படக்குழுவினருக்கு நோட்டீஸ் கொடுப்போம். அவர்கள் முன்சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தெறி தெலுங்கு ரீமேக்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் நவீன் ஏர்னேனி மற்றும் ரவி ஷங்கர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீலீலா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், அசுதோஷ் ராணா, நவாப் ஷா, பி.எஸ். அவினாஷ், கௌதமி மற்றும் சம்மக் சந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அட்லீ இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான தெறி படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இதில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











