'உயிரைக் காப்பாற்றுங்கள்' சிறுநீரகப் பாதிப்பால் நண்பரை இழந்த நடிகை.. உறுப்புத்தானம் செய்ய முடிவு!
சென்னை: சிறுநீரக பாதிப்பு காரணமாக நண்பரை இழந்த பிரபல நடிகை, தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.
தமிழில், தேரோடும் வீதியிலே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளவர், பாயல் கோஷ். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஓசரவல்லி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
ரிஷிகபூர், பரேஸ் ராவலுடன், படேல் கி பஞ்சாபி சாதி என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமா
கடந்த சில நாட்களுக்கு முன் இவர், மன அழுத்தம் பற்றி கூறியிருந்தார். 2015 ஆம் ஆண்டில் இருந்து மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளேன். என் பிரச்னை, மரண பயம். எதை கண்டாலும் பீதி. என் குடும்பத்தினர், நண்பர்கள் எனக்கு ஆறுதலாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் நடிகைகள் பற்றி பாலிவுட்டில் தவறான எண்ணம் இருக்கிறது என்று பரபரப்பு புகார் கூறியிருந்தார்.

தெய்வமாக பார்க்கிறார்கள்
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தேசிய விருது பெற்றுள்ள சில தென்னிந்திய இயக்குனர்கள் படங்களில் நடித்துள்ளேன். அவர்கள் நேர்மையாக இருக்கிறார்கள். அவர்களுடனும் தென்னிந்திய ஹீரோக்களுடனும் பணிபுரியும்போது எந்தவிதமான பிரச்னையும் ஏற்படவில்லை. அவர்கள் ஹீரோயின்களை தெய்வமாகப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் சில நடிகைகளுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

உடல் உறுப்புத்தானம்
இந்நிலையில், தனது நண்பர் ஒருவரை இழந்துவிட்டேன் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது ' சிறுநீரகப் பிரச்னை காரணமாக என் நண்பர் பாதிக்கப்பட்டிருந்தார். லாக்டவுன் காரணமாக, அவருக்குத் தானம் செய்பவர்கள் கிடைக்கவில்லை. அதனால் அவர் உயிரிழக்க நேரிட்டது. இது என்னைக் கடுமையாக பாதித்துள்ளது. அதனால் உடல் உறுப்புத்தானம் செய்ய முடிவு செய்துள்ளேன்.

காப்பாற்ற முடியும்
நீங்கள் மறைந்த பின்னும் மற்றவர்களைக் காப்பாற்ற உதவுங்கள். உறுப்புதானத்தை அதிகரிப்பதன் மூலம் பல உயிர்களை நாம் காப்பாற்ற முடியும்' என்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியுள்ளார். இதையடுத்து பல நெட்டிசன்கள் அவரை பாராட்டியுள்ளனர். அவரை சிலர் ரியல் குயின் என்றும் ரியல் ஹீரோ என்றும் வர்ணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











