பாக்ஸ் ஆபீஸில் 'பெத்தி' தாண்டவம்.. இரண்டே நாளில் இத்தனை கோடியா? ராம் சரணின் மாஸ் கம் பேக்!
சென்னை: ராம் சரண் நடிப்பில் வெளியாகியுள்ள 'Peddi' (பெத்தி) திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாற்று சாதனைகளைப் படைத்து வருகிறது. உலகளவில் முதல் நாளிலேயே 'சதம்' அடித்த இப்படம், இரண்டே நாட்களில் உள்நாட்டு வசூலிலும் ₹100 கோடி மைல்கல்லைக் கடந்துள்ளது.
முதல் நாளே சாதனை: 'பெத்தி' திரைப்படம் ரிலீசான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ₹135.36 கோடி மொத்த வசூல் செய்து சாதனை படைத்தது. ராம் சரணின் திரைப்பயணத்தில், முதல் நாளிலேயே ₹100 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையை 'பெத்தி' பெற்றுள்ளது. இதைத் தயாரிப்பு நிறுவனமான 'விருத்தி சினிமாஸ்' (Vriddhi Cinemas) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பாக்ஸ் ஆபிஸ் சாம்பியன் PEDDI... முதல் நாளில் உலகம் முழுவதும் ₹135.36 கோடிக்கும் அதிகமான வசூல் என அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்து இருந்தது.

இரண்டே நாளில் வசூல்: முதல் நாள் அதிரடியைத் தொடர்ந்து, இரண்டாம் நாளிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடர்கிறது. 'Sacnilk' தகவலின் படி, பெத்தி திரைப்படம் திரையிடப்பட்ட 10,113 தியேட்டர்களின் மூலம் இரண்டாம் நாளில் ₹26.9 கோடியை வசூலித்துள்ளது. தற்போது வரை இப்படம் இந்தியாவில் ₹114.49 கோடியை எட்டி, இரண்டே நாட்களில் ₹100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதில் தெலுங்கு பதிப்பு மூலம் ₹24.2 கோடியும், இந்தி பதிப்பு மூலம் ₹2.25 கோடியும் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராம் சரணின் மாஸ் கம்பேக்: ராம் சரணின் முந்தைய படமான 'கேம் சேஞ்சர்' எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், இந்த ஸ்போர்ட்ஸ்-ஆக்ஷன் திரைப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. பெத்தி திரைப்படத்திற்கு மக்களிடம் இருந்து தொடர்ந்து நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதால், இந்த வார இறுதிக்குள் 'பெத்தி' உலகம் முழுவதும் ₹200 கோடி வசூல் கிளப்பில் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, பொமன் இரானி மற்றும் திவ்யேந்து சர்மா ஆகியோர் நடித்த திரைப்படம் ஜூன் 4ந் தேதி தியேட்டரில் வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications