அனுமதியின்றி படப்பிடிப்பு.. சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு அபராதம்.. 17 பேர் மீது வழக்குப்பதிவு!
சென்னை: பொள்ளாச்சியில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்திய சிவகார்த்திகேயனின் டான் படக்குழுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். சின்னத்திரையில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள ரசிகராக வலம் வருகிறார்.
பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். கடைசியாக அவரது நடிப்பில் ஹீரோ படம் வெளியானது. கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அவரது படம் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் மற்றும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

தெலுங்கு படத்தில் ஒப்பந்தமான சிவகார்த்திகேயன்
இந்நிலையில் கடன் பிரச்சனையில் உள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. பல படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் அடுத்ததாக பிரபல தெலுங்கு பட இயக்குநரின் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கில் அறிமுகமாகும் சிவ கார்த்திகேயன்
அதாவது கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'ஜாதி ரத்னலு' படத்தை இயக்கிய அனுதீப், அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராக உள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார்.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான்
இந்நிலையில் தற்போது தமிழில் அயலான் மற்றும் டான் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இதில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

அனுமதியின்றி படப்பிடிப்பு
இந்த படத்தின் படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி ஆனைமலை அருகே ஆற்றங்கரை பகுதியில் முன் அனுமதியின்றி சிபி சக்ரவர்த்தி படப்பிடிப்பு நடத்தியுள்ளார். இது வனத்துறை எல்லைக்குள் வரும் பகுதி என கூறப்படுகிறது. உரிய அனுமதியின்றி படக்குழு படப்பிடிப்பை நடத்தியுள்ளது.

அபராதம் - வழக்குப்பதிவு
இதனையறிந்த அரசு அதிகாரிகள் படப்பிடிப்பு நடத்திய படக்குழுவிற்கு 19,400 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி உள்பட 17 பேர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











