வடிவேலு சும்மா இருந்தாலும் சுத்தி அடிக்கும் பிரச்சனை.. சொந்த ஊரிலேயே இவ்வளவு எதிர்ப்பா?
சென்னை: நடிகர் வடிவேலு மாமன்னன் படத்திற்கு பிறகு பகத் பாசில் நடித்துவரும் 'மாரீசன்' படத்திலும், சுந்தர்சியுடன் நகைச்சுவை திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். ரெட் கார்ட் பிரச்சனை நீதிமன்ற பிரச்சனை என பலவற்றில் சிக்கி சின்னாபின்னமான நடிகர் வடிவேலு தற்போது தான் அதில் இருந்து மீண்டு படத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதற்குள் சொந்த ஊரில் குலதெய்வ கோவில் பிரச்சனையில் சிக்கி, சொந்த ஊர் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி உள்ளார்
நடிகர் வடிவேலுவின் சொந்த ஊர் மதுரையாக இருந்தாலும், அவருடைய குலதெய்வம் ராமநாதபுரத்தில் உள்ள திருவேட்டை உடைய அய்யனார் கோவில் தான். இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாவில் வடிவேலு தனது குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. மேலும், கோவிலின் விரிவாக்கம், பிற பணிகள், அன்னதானம் போன்றவற்றுக்கும் வடிவேலு உதவி செய்ததால், கோவிலில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து, இவரிடம் ஊர்மக்கள் கலந்து ஆலோசனை செய்து எடுத்துள்ளனர்.

குலதெய்வ பிரச்சனை: இந்நிலையில், இந்த கோவிலை ஊர் மக்களே நிர்வகித்து வந்த நிலையில், வடிவேலுவுக்கு நெருக்கமான பாக்யராஜ் என்பவர் தனக்கு சொந்தமாக ஆக்கிக் கொள்ள முயற்சி செய்வதாக அக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இத்தனை வருடமா இந்த கோவிலை ஊர்மக்களே நிர்வகித்து வந்தனர். ஆனால், தற்போது, வடிவேலு பரம்பரை அறங்காவலர் என்கிற ஒரு பொறுப்பை ஊர் மக்களின் ஆலோசனையை பெறாமல் உருவாக்கியுள்ளதாகவும், இந்த பொறுப்பு பாக்கியராஜ் என்பவருக்கு கொடுக்கப்பட இருப்பதாகவும் ஊர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், காட்டுபரமக்குடி கிராம மக்கள் மற்றும் குலதெய்வ குடிமக்கள் கோவிலின் முன்பாக ஒன்று கூடி நடிகர் வடிவேலுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீண் பழி: இது குறித்து வடிவேலுவின் ஆதரவாளர் என்று சொல்லப்படும் பாக்யராஜ் கூறுகையில்,கோவிலை யாரும் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. வெளியூர் காரர்கள் சிலர், வடிவேலு அண்ணன் மீதும் என் மீதும் வீண் பழியை சுமத்துகின்றனர். இதுகுறித்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த கோவில் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வடிவேலு சுற்றி ஏற்கனவே பல பிரச்சனைன இருக்கும் நிலையில், குலதெய்வம் விவகாரத்தில் சிக்கி, சொந்த ஊர் மக்களின் எதிர்ப்புக்கும் ஆளாகி உள்ளார் வடிவேலு.


Click it and Unblock the Notifications











