1500 குடும்பத்திற்கு நிவாரண உதவி.. கமகமவென தயாரான தடல்புடல் விருந்து!
சென்னை: நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் நிவாரண உதவிகள் வழங்கியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு 21 வகையான மதிய உணவு பரிமாறப்பட்டது.
கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. 24 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. முன்னெச்சரிக்கையாக 5 அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

வரலாறு காணாத கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீரால் சூழப்பட்டதால் மீட்பு பணிகள் நடப்பதிலும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. பல இடத்திற்கு மீட்பு குழு செல்லவே முடியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டதாலும், மின் கம்பங்கள் சாய்ந்ததாலும், பல பகுதிகளில் 5 முதல் 6 நாள் வரை மின்சாரம் இல்லாமல் மக்கள் இருளில் தவித்தனர். பலரும் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் வீடுகளை இழந்து உண்ண உணவும், தங்குவதற்கான இடம் இல்லாமல் மொட்டை மாடியில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு ஹெலிகாப்டர் உதவியுடன் உணவு பெட்டலம் வழங்கப்பட்டது.
விஜய் மக்கள் இயக்கம்: இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கினார். இது தொடர்பான நிகழ்ச்சி நெல்லை கே.டி.சி நகரில் ஒரு அரங்கத்தில் நடைபெற்றது. அதில் கிட்டத்தட்ட 1500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், ஒருவாரத்திற்கு தேவையான காய்கறிகள், வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.25000 விஜய் வழங்குகிறார். இதில் தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த ராபின்சன் என்பவர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜெனரேட்டரை இயக்கும் பொழுது உயிரிழந்தார். அவரின் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சம் வழங்குகிறார். தூத்துக்குடி மாநகரை சேர்ந்த 500 பேர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் என தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விஜய் நிவாரண பொருட்களை வழங்கினார். இதற்கான நிவாரண பொருட்கள் சென்னையில் இருந்து வாகனத்தின் மூலம் நெல்லைக்கு கொண்டு சொல்லப்பட்டது.
தடபுடலான விருந்து: நல உதவியை தாய் மார்களுக்கு விஜய் நேரடியாக இருக்கைக்கே சென்று வழங்கினார். மேலும், நலத்திட்ட உதவி வழங்கிய பின், 1500 குடும்பங்களுக்கு அங்கேயே சுட சுட தடபுடலான சாப்பாடு போடப்பட்டது. இதில் சாதம், சாம்பார், சுண்டைக்காய் வத்தக்குழம்பு, ரசம், மோர், கத்திரிக்காய் வறுவல், பருப்பு கூட்டு, அவியல், முட்டைக்கோஸ் பொரியல், வடை, பால் பாயாசம், வத்தல், அப்பளம் என தடபுடலான விருந்து பரிமாறப்பட்டது.


Click it and Unblock the Notifications











