இயற்கை, ஈ, பேராண்மை பட இயக்குநர் எஸ்பி ஜனநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. ஐசியூவில் தீவிர சிகிச்சை!
சென்னை: இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்பி ஜனநாதன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் தரமான மற்றும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் எஸ்பி ஜனநாதன்.
ஷியாம், அருண் விஜய், குட்டி ராதிகா ஆகியோர் நடிப்பில் உருவான இயற்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தேசிய விருது
இந்த படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து ஜீவா, நயன்தாரா நடிப்பில் ஈ படத்தை இயக்கினார். பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் பேராண்மை படத்தை இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

சமூக பிரச்சனைகள்
தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா நடிப்பில் புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற படத்தை இயக்கினார். எஸ்பி ஜனநாதனின் படங்கள் அனைத்திலும் அரசியலும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளும் பேசப்பட்டிருக்கும்.

லாபம் திரைப்படம்
தற்போது விவசாயிகள் பிரச்சனையை பேசும் வகையில் லாபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திடீர் உடல்நலக்குறைவு
இந்நிலையில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் நேற்று திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். எடிட்டிங் பணியில் இருந்த அவர், நேற்று பகல் வீட்டிற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் ஸ்டுடியோவுக்கு திரும்பாததால் அவரது உதவியாளர்கள் வீட்டில் சென்று பார்த்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி
அப்போது சுயநினைவின்றி, உடலில் எந்த அசைவும் இன்றி மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சியான அவரது உதவியாளர்கள் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஐசியூவில் தீவிர சிகிச்சை
அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சற்று கவலைக்கிடமான நிலையில் உள்ள எஸ்பி ஜனநாதனுக்கு ஐசியூவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்பி ஜனநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











