Vijay: விஜய் செய்தது தவறு.. ஒருத்தர் விடாமல் எல்லோரையும் விளாசிவிட்ட இயக்குநர் பேரரசு!
இயக்குநர் பேரரசு, விஜய் ரசிகர்கள் மரணம் குறித்து ஆவேசமாகப் பேசினார். காவல்துறை, உளவுத்துறை மற்றும் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். உயிர் இழப்பின் தீவிரத்தை வலியுறுத்தி, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மக்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். இந்த சம்பவம் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்குமா என்றும் கேள்வி எழுப்பினார்.
சென்னை: கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மொத்தம் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் குறித்து இயக்குநர் பேரரசு பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது கருத்தைத் தெரிவித்தார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அவர் விஜய்யில் தொடங்கி, காவல்துறை, ஆளும் திமுக அரசு என பலரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் பேட்டி அளிக்கையில், “ திருச்சியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டபோதும் கண்டுகொள்ளாத காவல்துறை, கரூரில் நடந்த துயரத்துக்குப் பிறகு விழித்துக் கொள்ளாதது ஏன்?. உளவுத்துறை என்ன செய்கிறது, ஏன் இவ்வளவு தாமதம் என்றும் காட்டமாக விமர்சித்தார். உயிர் இழப்பு என்பது எந்தக் குடும்பத்துக்கும் பேரிழப்பு, அதை இழப்பீடுகளைக் கொடுத்து ஈடு செய்ய முடியாது.
விஜய் போன்ற பெரிய தலைவர்கள் மக்கள் உயிருக்கு மதிப்பளித்து இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்துச் செல்வது தவறு. சந்தோஷத்துக்காகக் கூட்டிட்டுப் போறீங்க, ஆனா உயிர் போனா எப்படி சந்தோஷம் வரும்?. விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே நாலைந்து பேர் இறந்து கிடந்ததாகவும், அதை எப்படி எடுத்துக்கொள்வது என்றும் கேள்வி எழுப்பினார். உயிருக்கு ஆபத்து என்றால் எந்தத் தலைவராலும் பேச முடியாது. அது கண்ணுக்குத் தெரியாமல் நடந்திருக்கலாம், அல்லது தடியடி சம்பவத்துக்குப் பிறகு நடந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும், உயிரிழப்புக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும்.

அதிகார பலம்: ஜெனரேட்டர் ரூமில் அதிகமான ஆட்கள் இருந்ததால் மின்சாரம் தடைபட்டிருக்கலாம், வேண்டுமென்று செய்தார்களா அல்லது விபத்தா என்பது விசாரணையில் தெரியவரும். சம்பவம் நடந்தவுடன் விஜய் எதுவும் பேசாமல் ஏர்போர்ட் சென்றது, சிரித்தபடி போட்டோ எடுத்தது குறித்துப் பலரும் விமர்சிப்பது பற்றிப் பேசிய பேரரசு, அது ஏற்கனவே எடுக்கப்பட்ட வீடியோ என்றும், சிலர் வேண்டுமென்றே பரப்புகிறார்கள். மேலும், அந்தச் சூழலில் விஜய் அங்கு இருந்திருக்கக் கூடாது. முதலமைச்சர், அமைச்சர்களுக்கு இருக்கும் அதிகார பலம் விஜய்க்கு இல்லை. எனவே அவர் அங்கிருந்து சென்னைக்கு வந்ததுதான் சரி.
போகாதது தான் சரி: "எம்.ஜி.ஆர் இறந்தபோது கலைஞர் போகல. அங்க என்ன நடக்கும்னு தெரியாது. தொண்டர்கள் உணர்ச்சி வெள்ளத்தில் இருப்பார்கள். அப்படி இருக்கும்போது, விஜய் மாதிரி அதிகார பலம் இல்லாதவங்க போய் சிக்க முடியாது. சீமான் போன்ற தலைவர்கள் கூட அங்கு அவமானப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், ஒரு அரசியல்வாதி ஆறுதலாக இருக்கப் போகும்போது, அங்கே எதிர்ப்புகள் வந்தால் என்ன செய்வது. சில இடங்களில் போகாமல் தவிர்ப்பது நல்லது. விமர்சனங்களுக்குப் பயந்து இன்னும் அசிங்கப்பட வேண்டாம் என்பதுதான் நல்லது என்றும்” தெரிவித்தார்.
அனுபவம் இல்லாத விஜய்: கரூரில் நடந்த சம்பவம் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்குமா என்ற கேள்விக்கு, ”விசாரணை நேர்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் இதன் விளைவுகள் தெரியவரும். மேலும், காவல்துறையும் உளவுத்துறையும் சரியாக செயல்படவில்லை, அவர்கள் கேட்ட இடத்தை கொடுக்காமல் குறுகலான இடத்தில் அனுமதித்தது தவறு. விஜய் தரப்பில் இருந்தும் அப்படியான இடத்தை ஊருக்கு நடுவே பிரச்சாரம் செய்ய இடத்தை கேட்க கூடாது. ஊருக்கு வெளியே பிரச்சாரம் செய்ய இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அரசியலில் அனுபவம் இல்லாத விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்தை இது போன்ற விஷயங்களில் காவல்துறை வழிநடத்தவேண்டும். காவல்துறையினர் பேச்சை அவர்களும் கேட்க வேண்டும்.
விஜய் கைது: விஜயை கைது செய்ய வேண்டும் என்று சிலர் சொல்வது குறித்துப் பேசிய அவர், அப்படிச் செய்தால் பல அரசியல் தலைவர்களையும் கைது செய்ய வேண்டி வரும். எல்லாரையும் உள்ளே போட வேண்டியதுதான். முதலமைச்சர் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் ஏன் உடனே போகவில்லை?. எல்லா உயிரும் ஒன்றுதான், அதை சமமாக நடத்த வேண்டும். ரஜினி உடனடியாக ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தது குறித்தும் பேரரசு கருத்து தெரிவித்தார். ரஜினி எப்போது ரியாக்ட் செய்தாலும் தப்பு சொல்லும் கூட்டம் இருக்கிறது. 40 பேர் இறந்து போயிருக்காங்க, அவங்க ஆத்மா சாந்தியடையட்டும்னு சொல்றதுல என்ன தப்பு இருக்கு?”


Click it and Unblock the Notifications











