துல்கர் சல்மானின் காந்தா படத்திற்கு வந்த சிக்கல்.. தடை கோரி வழக்கு.. திட்டமிட்டபடி படம் வெளியாகுமா?
சென்னை: தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள காந்தா திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் பதிலளிக்கும்படி, தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.கே.தியாகராஜ பாகவதர் தனது கந்தர்வ குரலால் தமிழகத்தை 1940களில் கட்டிப்போட்டவர். 1934 ஆம் ஆண்டு வெளியான பவளக்கொடி படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். அன்றைய காலகட்டத்தில் நடிகர்களே அவர்களுக்குரிய பாடல்களை பாட வேண்டும் என்பதால், சிறந்த குரல்வளம் கொண்டவர்களே நடிகர்களாக முடியும். அந்த வகையில் எம்.கே.தியாகராஜ பாகவதர் கிட்டத்தட்ட 15 திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். இதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இவர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் திரையரங்கில் 3 ஆண்டுகள் ஓடியது.

காந்தா: எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள காந்தா திரைப்படத்தில், துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி, ராணா என பலர் நடித்துள்ளனர். . ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வேஃபரர் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காந்தா திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் தியேட்டரில் வரும் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தடைவிதிக்க வேண்டும்: இந்நிலையில், காந்தா திரைப்படத்துக்கு தடை கோரி எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேன் தியாகராஜன் வழக்கு பதிவு செய்துள்ளார். தனது மனுவில், நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், காந்தா என்ற பெயரில் படம் 14ந் தேதி வெளியாக உள்ளது. பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுப்பதாக இருந்தால், அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் அனுமதி பெற வேண்டும். படத்தில், கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றப்பட்டு இருந்தாலும், மக்களும் அது எளிதில் புரிந்துவிடும், பாகவதர் ஒழுக்கமின்றி வாழ்ந்ததாகவும், கடைசி காலத்தில் வறுமையில் சிக்கி, கடனாளியாக இறந்ததாக படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பதிலளிக்க உத்தரவு: அது உண்மை இல்லை, அவர் சொந்தமாக பங்களா வைத்திருந்தார், விலை உயர்ந்த கார்களை வைத்திருந்தார். அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் அவருக்கு கிடையாது என்றும் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் தியாகராஜன் அந்த மனுவில் கூறியுள்ளார். அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல், அவதூறான முறையில் சித்தரித்து எடுக்கப்பட்ட காந்தா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டு நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











