Thalaivar 170 - தலைவர் 170.. இதுதான் ரஜினியின் கெட்டப்பா?.. ட்ரெண்டாகும் புது லுக்
சென்னை: Thalaivar 170 (தலைவர் 170) ரஜினி புது லுக்கில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கும் சூழலில் இதுதான் 170ஆவது படத்தின் கெட்டப்பா என ரசிகர்கள் கேட்டுவருகின்றனர்.
ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தின் மீது அவரும், அவரது ரசிகர்களும் முழு நம்பிக்கை வைத்திருக்கின்றனர். பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் இதில் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

கவனம் ஈர்த்த ட்ரெய்லர்: ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்த சூழலில் படத்தின் ட்ரெய்லர் நேற்று முந்தினம் வெளியாகி சக்கைப்போடு போட்டுவருகிறது. ரஜினிக்கு பக்கா மாஸ் காட்சிகளுடன் உருவாகியிருக்கும் ஜெயிலர் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என ட்ரெய்லரை பார்த்த பிறகு ரஜினியின் ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது.
லால் சலாம்: ஜெயிலரில் நடித்துக்கொண்டிருந்தபோதே லால் சலாம் படத்திலும் கமிட்டாகி நடித்து முடித்திருக்கிறார். இரண்டு படங்களுமே ஹிட்டடித்து ரஜினி தரமான கம்பேக் கொடுப்பார் என தலைவரின் ரசிகர்கள் கூறுகின்றனர். இந்தச் சூழலில் ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படமானது ரஜினிக்கு 170ஆவது திரைபடம் ஆகும்.
முக்கியத்துவம் வாய்ந்த படம்: தற்போது நடித்திருக்கும் ஜெயிலர் நிச்சயம் கமர்ஷியல் படமாகத்தான் உருவாகியிருக்கும். அதேசமயம் ஞானவேல் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தலைவர் 170 கண்டிப்பாக ரஜினியின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் இருக்கும். இதில் இஸ்லாமிய காவல் துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது.

உண்மை சம்பவம்?: ஜெய் பீம் படத்தை ஞானவேல் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கியிருந்தார். அது பெரும் ஹிட்டாகி உரையாடலையும் சமூகத்தில் தொடங்கிவைத்தது. அதேபோல் இந்தப் படத்தையும் அவர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் இயக்கவிருக்கிறார் என்றும்; படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் செட் போடப்பட்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
புதிய லுக்: இந்நிலையில் ரஜினிகாந்த் புதிய லுக்கில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் வெள்ளை சட்டை அணிந்திருக்கும் ரஜினி கறுப்பு கலர் ஃப்ரேம் போட்டுக்கொண்டு முடியையும், தாடியையும் நன்றாக ட்ரிம் செய்தபடி இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இதுதான் தலைவர் 170 கெட்டப்பாக இருக்குமோ என கேள்வி எழுப்பிவருகின்றனர். இதற்கிடையே இன்று தலைவர் 170 படத்துக்கான லுக் டெஸ்ட் நடைபெறும் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











