விபத்திலிருந்து மீண்டு வந்த விஜய் ஆண்டனி - வெளியானது அசத்தல் அப்டேட்
சென்னை: விஜய் ஆண்டனி விபத்தை சந்தித்த பிறகு அவர் இயக்கி நடித்திருக்கும் படமான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அசத்தல் அப்டேட் வெளியாகியுள்ளது.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அந்தப் படத்தில் அவர் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தார். இதனையடுத்து ஜீவா நடித்த டிஷ்யூம் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அடையாளப்பட்டார் விஜய் ஆண்டனி. இருப்பினும் அவரை முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் அமர வைத்தது காதலில் விழுந்தேன் திரைப்படம். குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 'நாக்க முக்க' பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது.

இசையமைப்பாளரிலிருந்து ஹீரோ அவதாரம்
தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி 'நான்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கனகச்சிதமான நடிப்பை வழங்கிய விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அப்படி அவர் நடித்த 'சலீம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பல படங்களில் நடித்தாலும் பூ பட இயக்குநர் சசி இயக்கத்தில் அவர் நடித்த பிச்சைக்காரன் படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் கதையும், அவரது நடிப்பும் படத்தை பெரும் ஹிட்டாக்கின.

இயக்குநரான விஜய் ஆண்டனி
பிச்சைக்காரன் கொடுத்த வெற்றியை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்தப் படத்தையும் சசி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விஜய் ஆண்டனியே இந்தப் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது். எனவே இசையமைப்பாளர், ஹீரோ, தயாரிப்பாளர் என இருந்த விஜய் ஆண்டனி இயக்குநராகவும் இப்படத்தின் மூலம் அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் உள்நாடு, வெளிநாடு என விறுவிறுப்பாக நடந்து வந்தது.

பிச்சைக்காரன் 2 ஷூட்டிங்கில் விபத்து; மீண்ட விஜய் ஆண்டனி
இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழு மலேசியா சென்றது. அங்கு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த விஜய் ஆண்டனி கடந்த இரண்டாம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில்,
"அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்துவிட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன் அன்புக்கு நன்றி" என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த ட்வீட் ரசிகர்களை நிம்மதியடைய செய்தது.

பிச்சைக்காரன் 2 படம் குறித்து வெளியான அப்டேட்
இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படம் குறித்த அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, "பணம் உலகை காலி பண்ணிடும்" என்ற வாசகத்தோடு வெளியாகியிருக்கும் அப்டேட்டில், பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் 4 நிமிட ஸ்னீக் பீக் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படமானது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











