»   »  தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கை தரும் கலைப்புலி தாணுவின் புதிய முயற்சி!

தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கை தரும் கலைப்புலி தாணுவின் புதிய முயற்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தை சட்டவிரோதமாக வெளியிடும் இணையத்தளங்களை முடக்கம் செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர் தாணு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தமிழ் சினிமாவுக்கு புதிய நம்பிக்கை தந்துள்ளது.

பொதுவாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், தங்கள் படம் வெளியாகி, திருட்டு விசிடியும் வெளியான பிறகுதான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவோடு நிற்பார்கள். அடுத்த சில நாட்களில் அந்தப் புகார் அப்படியே நீர்த்துப் போகும்.


Piracy: Thaanu's new effort gives hope to producers

ஆனால் முதல் முறையாக திருட்டு வீடியோ வருமுன் காக்கும் நடவடிக்கையாக கலைப்புலி தாணு ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்ததோடு, உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து வெற்றிப் பெற்றுள்ளார்.


ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் கபாலி படத்தை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம், பதிவேற்றம் செய்யும் இணையதளங்களுக்குத் தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாணு வழக்குத் தொடர்ந்தார்.


அந்த மனுவில், "கபாலி திரைப்படத்தை சுமார் ரூ.100 கோடி செலவில் தயாரித்துள்ளேன். தமிழ் உள்பட பல மொழிகளில் உலகம் முழுவதும் 4,400 திரையரங்குகளில், வரும் 22-ஆம் தேதி கபாலி படம் வெளியாகிறது. தமிழ் திரையுலகில், எந்த புதுப்படம் திரைக்கு வந்தாலும், அடுத்த சில நிமிஷங்களில் திருடப்பட்டு இணையங்களில் சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. இதனால் கோடிக்கணக்கில் செலவழித்து எடுக்கப்படும் படங்கள் திரையரங்குகளில் 10 நாள்கள் கூட ஓடுவதில்லை.


எனது தயாரிப்பில் வெளியான தெறி, கணிதன் போன்ற படங்கள் இணைய தளங்களில் வெளியானதால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தேன். இதேபோல், கபாலி திரைப்படமும் இணைதளங்களில் சட்டவிரோதமாகப் பதிவிறக்கம், பதிவேற்றம் செய்யப்படுவதாக அறிகிறேன். இதனைத் தடுக்கும் வகையில், நாட்டிலுள்ள 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். 'இந்தியாவின் மகள்' என்ற திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்டால், இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என, மத்திய அரசு எச்சரித்தது. இதனால், அந்தப் படம் இணைய தளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவது தடுக்கப்பட்டது," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கலைப்புலி தாணு தரப்பு மூத்த வழக்குரைஞர் விஜய் நாராயணன் முன்வைத்த வாதம்:


பல கோடி ரூபாய் செலவில், ஆயிரக்கணக்கானோரின் உழைப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்தை, ரூ.20 செலவில், 8 நிமிடத்தில் சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து, பல ஆயிரம் திருட்டு சிடிகளை தயாரித்து விற்கின்றனர். தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வந்த சில நிமிடங்களிலேயே, டிஜிட்டல் தரத்தில் இணையங்களில் வெளியாகின்றன. இதுபோன்ற இணையதளங்களை முடக்கினாலும், அவர்கள் பெயரை மாற்றி புதிய தளத்தை உருவாக்கி விடுகின்றனர். எனவே, ஒரு புதிய திரைப்படம் வெளியாகும் தினத்திலிருந்து 5 முதல் 10 நாள்களுக்கு, இந்த 169 இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களை முடக்கினாலே, நாங்கள் எங்களது வருமானத்தை ஈட்டிவிடுவோம்," என்று வாதிட்டார்.


மேலும், பேருந்து, வாகனங்கள், உள்ளூர் கேபிள் டிவிகளிலும் கபாலி படத்தை ஒளிபரப்புவதைத் தடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கை தயாரிப்பாளர் தாணு இன்று தொடர்ந்தார்.


இதையடுத்து, கபாலி படத்தை சட்டவிரோதமாக வெளியிடும் இணையத் தளங்களை முடக்கம் செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர் தாணு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பேருந்து, வாகனங்கள், உள்ளூர் கேபிள் டிவிகளிலும் கபாலி படத்தை ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 8-ம் தேதி ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.


தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இந்த வழக்கும் அதற்கான தீர்ப்பும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஓரிரு வாரங்கள் திருட்டு விசிடியைக் கட்டுப்படுத்தினாலே போதும், ஓரளவு தகுதியான தமிழ்ப் படங்கள் பிழைத்துக் கொள்ளும் என்பதுதான் நிலைமை. அதற்கு தாணுவின் இந்த புதிய முயற்சி மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

English summary
Kalaipuli Thaanu's new effort to prevent video piracy is giving a ray of hope to Tamil film producers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil