ஓட்டலில் போதை பொருள் பார்ட்டி.. தாதாவுடன் தொடர்பா? விசாரணையில் சிக்கிய பிசாசு பட நடிகை!
சென்னை: கொச்சியில் பிரபல ஓட்டலில் விடிய விடிய நடந்த போதைப் பொருள் பார்ட்டியில், சினிமா பிரபலங்கள் உட்பட 20 பேர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில், மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகர் ஸ்ரீநாத் பாசி மற்றும் பிசாசு பட நடிகை பிரயாகா மார்டின் ஆகியோர் போலீசாரின் விசாரணையில் சிக்கி உள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ், பிரபல தாதாவான இவர் மீது கொலை, கொலை முயற்சி என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. ஆரம்பத்தில் சிறு சிறு குற்றசம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஓம் பிரகாஷ், காலப்போக்கில் பிரபல தாதாவாக வலம் வரத் தொடங்கியதால், ஊருக்குள் பகையை வளர்ந்துக்கொண்டதால், இவருக்கு பல எதிரிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர், பல குற்ற சம்பவத்திற்கான சிறைக்கு சென்றுள்ளார். மேலும், முத்தூட் அதிபரை கொலை செய்த வழக்கும் இவர் மீது நிலுவையில் உள்ளது.

ஓட்டலில் நைட் பார்ட்டி: இந்நிலையில் அக்டோபர் 6ந் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதைப்பொருள் பார்ட்டி நடப்பதாகக் கொச்சி போதைப்பொருள் ஒழிப்பு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவலை அடுத்து காவல் துறையினர் அந்த விடுதியில் சோதனை நடத்தினர். இதில், ஓம் பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளியான சிகாஷ் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களின் அறையில் இருந்து போதைப் பொருட்களோடு, 8 உயர் ரக மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிரடி விசாரணை: போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஓம் பிரகாஷ் அளித்த நைட் பார்ட்டியில், சினிமா பிரபலங்கள் உட்பட 20 பேர் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஓம் பிரகாஷ் மற்றும் அவரின் கூட்டாளியை கொல்லம் மாவட்ட மாஜிஸ்ரேட் முன்பு ஆஜர்படுத்திய போலீசார், ஓம் பிரகாஷ் கொடுத்த, நைட் பார்ட்டியில், மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி மற்றும் பிசாசு பட நடிகை பிரயாகா மார்டின் என 20 பேர் கலந்து கொண்டதால், இதுகுறித்து, அவர்களிடம் விசாரிக்க அனுமதி வேண்டும் என கேட்கப்பட்டது. இருதரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிமன்றம் போலீசாரின் கோரிக்கையை நிராகரித்து ஓம் பிரகாஷ் மற்றும் அவரின் கூட்டாளிக்கு ஜாமீன் வழங்கியது.

பிசாசு பட நடிகை: இதையடுத்து,போதைப்பொருள் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகர் ஸ்ரீநாத் பாசி மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதே போல நடிகை பிரயாகா மார்டின் மிஸ்கின் இயக்கிய பிசாசு படத்தில் பேய்யாக நடித்திருந்தார். இவர்கள் விடுதியில் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் போதைப் பொருள் இருந்ததற்கான தடயங்கள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விடுதியின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
எந்த சம்ந்தமும் இல்லை: போதைப் பொருள் பயன்படுத்தியதாக தன் மீது எழுந்துள்ள புகாரை நடிகை பிரயாகா மார்ட்டின் மறுத்துள்ளார். ஓம் பிரகாசை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. நண்பர்கள் சிலரைப் பார்ப்பதற்காக அந்த விடுதிக்குச் சென்றேன். அதன் பிறகு கோழிக்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல இருந்ததால், அந்த விடுதி அறையில் இரண்டு மணி நேரம் தங்கினேன். மற்றபடி போதைப் பொருள் பயன்படுத்தியதாக என் மீது குற்றம் சுமத்துவது சரியில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











