நடிச்சா மட்டும் போதுமா? 'பிச்சைக்காரன்' மூர்த்தி பளீர்
சென்னை: காமெடி கேரக்டர் மட்டுமல்லாமல், குணசித்திர வேடங்களில் நடித்துவருவதாக கோவிந்த மூர்த்தி சொன்னார்.
கரண் நடித்த கருப்பசாமி குத்தகைதாரர் படத்தை இயக்கியவர் மூர்த்தி. இந்தப் படத்தில் வடிவேலுவின் படித்துறை பாண்டி காமெடியை இப்போதும் மறக்க முடியாது. இதை அடுத்து பசுபதி நடித்த, வெடிகுண்டு முருகேசன் படத்தை இயக்கினார். இதிலும் வடிவேலுவின் அலர்ட் ஆறுமுகம் கேரக்டரை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
அடுத்து, பப்பாளி படத்தை இயக்கிய அவர், சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தில், பிச்சைக்காரனாக நடித்தார். இந்தப் படம் ஹிட்டானதைத் தொடர்ந்து முழு நேர நடிகராகியுள்ளார்.

எம்.ஜி.ஆர் மகன்
இப்போது வெள்ளையானை, எம்.ஜி.ஆர்.மகன், நாடோடிகள் 2 உட்பட சில படங்களில் பல்வேறு கேரக்டர்களில் நடித்து வருகிறார். படம் இயக்கும் முயற்சியிலும் இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

குணசித்திர வேடம்
பிச்சைக்காரன் படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அதிகமான வாய்ப்புகள் வந்தன. இப்போது காமெடி கேரக்டர் மட்டுமல்லாமல், குணசித்திர வேடங்களிலும் நடித்துவருகிறேன்.

புரட்சியாளர், விவசாயி
சமுத்திரக்கனி இயக்கியுள்ள, நாடோடிகள் 2 படத்தில் புரட்சியாளராக நடித்துள்ளேன். பொன். ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் எம்.ஜி.ஆர் மகன் படத்தில், வழக்கறிஞராக நடித்திருக்கிறேன். சீரியசான கேரக்டர்.

விவசாயியாக...
சுப்பிரமணிய சிவா இயக்கியுள்ள வெள்ளையானை படத்தில் விவசாயியாக நடித்துள்ளேன். இந்தப் படங்கள் வெளியானால், என்னை வேறொரு மூர்த்தியாகப் பார்க்க முடியும். தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன என்ற மூர்த்தி தனது பெயரை கோவிந்த மூர்த்தி என்று மாற்றியிருக்கிறார்.

நடிப்பும் இயக்கமும்
'பெயரை எப்போதோ மாற்றிவிட்டேன். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இயக்குவதுதான் என் நோக்கம். அடுத்து படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறேன். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. நடிப்பு, இயக்கம் என என் பயணம் தொடரும்' என்றார் கோவிந்த மூர்த்தி.


Click it and Unblock the Notifications











