பட்டகஷ்டம் எல்லாம் வீணாபோச்சே.. பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்!
சென்னை: பிரபல பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ.துரை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 59.
எவர் கிரின் மூவிஸ் தயாரிப்பாளரான விஏ துரை, என்னம்மா கண்ணு, பிதாமகன், கஜேந்திரா, லூட்டி போன்ற படங்களை தயாரித்து தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளராக இருந்தார். பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா இணைந்து நடித்த பிதாமகன் படத்தை தயாரித்தது இவர் தான்.

தயாரிப்பாளர் விஏ துரை: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான விஏ துரை, கஜேந்திரா படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால், மிகவும் நொடிந்து போய், வீடு வாசல், சொத்து அனைத்தையும் இழந்து, சாலிகிராமத்தில் உள்ள நண்பர் வீட்டில் தங்கி இருந்தார்.
மோசமான நிலையில்: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு காலில் புண் ஏற்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாக காலை அரித்துவிட்டது. இவரை கவனித்துக்கொள்ளக்கூட ஆள் இல்லாத மோசமான நிலைமையில் இருந்தார். விஏ துரையின் மோசமான நிலையை விளக்கி அவரது நண்பர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
பாலா ஏமாற்றிவிட்டார்: இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் விஏ துரை யூடியூப் ஒன்றுக்கு அளித்திருந்தார். அதில், நான் எடுத்த என்னம்மா கண்ணு,லூட்டி போன்ற படங்கள் தான் சுமாரா ஒடுச்சு மற்றபடி நான் எடுத்த அனைத்துப்படங்களும் பிளாப் தான். கஜேந்திரா படத்தை 11 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்தேன், ஆனால், அந்த படம் பிளாப்பாகி நான் சேர்த்துவைத்திருந்த பணம், வீடு எல்லாமே போய்விட்டது. மேலும் இயக்குநர் பாலாவிடம் 25 லட்சம் ரூபாய் புது படத்திற்காக கொடுத்தேன். ஆனால், அவர் என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறியிருந்தார்.
உயிரிழந்தார்: இதையடுத்து, அவரது மருத்துவ செலவிற்கு ரஜினி, சூர்யா, கருணாஸ், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் உதவி செய்தனர். அவருக்கு சர்க்கரை நோய் அதிகரித்ததை அடுத்து அவரது கால் அகற்றப்பட்டு, வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 59. இவருக்கு விஜயலட்சுமி, லட்சுமி என்று இரண்டு மனைவிகளும், முதல் மனைவிக்கு இரண்டு மகள்களும்,இரண்டாவது மனைவிக்கு ஒரு மகளும் உள்ளனர். இவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











