அமித்ஷா மாதிரி ஐடியா.. சந்தான பாரதி மாதிரி எக்ஸிக்யூட்.. இவனுங்க எதுக்கு பிளான் பண்ணுறாங்க?
சென்னை: ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி உள்ள 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
பாசிட்டிவ் பிரின்ட்ஸ் ஸ்டூடியோ தயாரிப்பில், பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தற்போது வெளியாகி உள்ள டீசரில், நோ மீன்ஸ் நோ, அமித்ஷா மாதிரி ஐடியா பண்ணி.. சந்தான பாரதி மாதிரி எக்ஸிக்யூட் பண்ணுவாரே போன்ற வித்தியாசமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

போக்கிரி வடிவேலு டயலாக்
தளபதி விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில், வடிவேலு சொல்லும் காமெடி வசனமான "பிளான் பண்ணி பண்ணனும்" என்பதையே டைட்டிலாக வைத்து, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் தனது புதிய படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

இரண்டாவது படம்
சின்னத்திரையில் பிரபலமாக இருந்த ரியோ ராஜுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோ வாய்ப்பு கிடைத்தது. பிளாக்ஷீப் டீமின் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா வெற்றியைத் தொடர்ந்து, பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ஹீரோவாக இரண்டாவது படத்தில் நடித்துள்ளார்.

பானா காத்தாடி இயக்குநர்
2010ம் ஆண்டு அதர்வா, சமந்தா, பிரசன்னா நடிப்பில் வெளியான பானா காத்தாடி படத்தை இயக்கிய இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், 2018ம் ஆண்டு மீண்டும் அதர்வாவுடன் இணைந்து செம போத ஆகாதே படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், தற்போது, மூன்றாவது படமாக பிளான் பண்ணி பண்ணனும் படத்தை இயக்கி உள்ளார்.

ரம்யா நம்பீசன்
பீட்சா, சேதுபதி மற்றும் சீதக்காதி என விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த ரம்யா நம்பீசன், விஷ்ணு விஷாலின் குள்ள நரிக்கூட்டம், கவினின் நட்புன்னா என்னான்னு தெரியுமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, இளம் ஹீரோவான ரியோ ராஜுக்கு ஜோடியாக பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், பால சரவணன், எம்.எஸ். பாஸ்கர், ரேகா மற்றும் சந்தான பாரதி நடிப்பில் உருவாகி உள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த டீசரையும் அவர் வெளியிட்டுள்ளார்.
டீசர் எப்படி இருக்கு?
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தைத் தொடர்ந்து, இந்த படமும் காமெடி கமர்ஷியல் என்டர்டெயினராகத்தான் உருவாகி உள்ளது என்பது டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. கன்சீவ் ஆக இருக்கிறேன் என ரம்யா சொல்வதும், அதுக்கு ரியோ ராஜின் ரியாக்ஷனும், அவ்வப்போது, ரோபோ சங்கர் ஸ்லோ மோஷனில் சொல்லும் வசனங்களும் என டீசர் ஓகே ரகம் தான்.

அமித்ஷா வசனம்
பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் டீசரில், நடிகர் பால சரவணன் ஒரு கட்டத்தில், அவர்தான் அமித்ஷா மாதிரி ஐடியா பண்ணி, சந்தான பாரதி மாதிரி எக்ஸிக்யூட் பண்ணுவாருன்னு நமக்கு தெரியாதா எனப் பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. மேலும், டீசரின் இறுதியில், ரம்யா நம்பீசன், "நோ மீன்ஸ் நோ" என எதுக்காக சொல்கிறார் என்பதும் சஸ்பென்ஸ்.


Click it and Unblock the Notifications











