பாடகர் கே.ஜே.யேசுதாசின் சகோதரர் மர்மமான முறையில் மரணம்.. ஆற்றில் மிதந்த சடலம்.. பரபரப்பு!
சென்னை: பாடகர் கேஜே யேசுதாஸின் சகோதர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவின் பிரபல பாடகர் கேஜே யேசுதாஸ். கேரள மாநிலம் கொச்சினை பூர்விகமாக கொண்டவர்.
இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா, பெங்காலி, ஒடியா, அரபிக், ஆங்கிலம், லத்தின், ரஷ்யன் என்ற பல மொழிகளில் பாடல்களை பாடியிருக்கிறார் யேசுதாஸ்.

பத்ம விருதுகள்
இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த பின்னணி பாடகருக்கான மத்திய அரசின் தேசிய விருதை 8 முறை பெற்றிருக்கிறார் யேசுதாஸ். அதுமட்டுமின்றி இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார் பாடகர் கேஜே யேசுதாஸ்.

யேசுதாஸ் சகோதரர் மரணம்
அவரது மகனாக விஜய் யேசுதாஸ் பாடகராகவும் நடிகராகவும் உள்ளார். மாரி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்நிலையில் பாடகர் கேஜே யேசுதாஸின் வீட்டில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. அதாவது கேஜே யேசுதாசின் சகோதரர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

காணாமல் போனார்
கே.ஜே.யேசுதாசின் இளைய சகோதரர் கே.ஜே.ஜஸ்டின். 62 வயதான இவர் கேரளா மாநிலம் காக்கநாடு பகுதியில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி இரவு கேஜே. ஜஸ்டின் காணாமல் போனதாக தெரிகிறது. இதுகுறித்து கேரள போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கேஜே ஜஸ்டின் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அடையாளம் காணப்பட்டது
இந்நிலையில், கொச்சி நகரின் வல்லார்படம் பகுதியில் ஆற்றங்கரையோரம் ஜஸ்டின் வயதையொத்த ஒருவரது சடலம் மிதந்துக் கொண்டிருப்பதாக திரிக்ககர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்தவர் ஜேசுதாஸின் சகோதரர் தான் என அடையாளம் காணப்பட்டது.

காரணம் என்ன?
பின்னர் அவரது சடலத்தை எர்ணாகுளத்தில் உள்ள பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி சுனு கூறும்போது, ஜஸ்டினுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு இருந்தது. அதனால் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், அவர் உயிரிழந்தது பற்றிய உண்மையான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.

போலீசார் தீவிர விசாரணை
பாடகர் கேஜே யேசுதாஸின் சகோதரர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேஜே ஜஸ்டின் உயிரிழந்தற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அப்படியானால் அதற்கான காரணம் என்ன என்றும் அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கேஜே யேசுதாஸின் குடும்பத்தில் நிகழ்ந்த இந்த சோக சம்பவம் மலையாளம் மற்றும் தமிழ் திரைத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











