வாணி ஜெயராம் தலையில் காயம்..மரணத்தில் சந்தேகம்.. தடயவியல் குழுவின் ரிப்போர்ட்!
சென்னை : பாடகி வாணி ஜெயராம் தலையில் காயம் இருந்ததால், மரணத்தில் சந்தேகம் அடைந்த போலீசார் வீட்டில் தீவிர தடயவியல் சோதனை நடத்தினர்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் இன்று பிப்ரவரி 4 காலமானார். தவறி விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78.
அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

வாணி ஜெயராம்
"ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி" என்ற பெருமைக்குரிய வாணி ஜெயராம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வாணி ஜெயராம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

மல்லிகை என் மன்னன் மயங்கும்
தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு தீர்க்கசுமங்கலி ௭ன்ற படத்தில் கவிஞர் வாலி இயற்றிய மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடி, மல்லிகைப்பூ வாசமாக வீடுதோறும் தன் மென்மையான குரலால் வீசிசென்றார். இவர் திரைப்பட பாடல்கள் பாப் இசை,கஜல்,நாட்டுப்புற பாடல்களையும் பாடி உள்ள வாணி ஜெயராம், நான்கு தலைமுறை பாடகியாக வலம் வந்தார்.

தலையில் காயம்
பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்த செய்திகாட்டுத் தீபோல பரவி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், தலையில் ஏற்பட்ட காயமே வாணி ஜெயராம் உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையில் முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தடவியல் நிபுணர்கள் வாணி ஜெயராம் வீட்டுக்கு சென்று சுமார் 20வது நிமிடங்கள் ஆய்வு செய்தனர்.

சந்தேகம் இல்லை
அதில், வாணி ஜெயராம், படுக்கைக்கு அருகில் இருந்த மேசை மீது விழுந்ததால் வாணி ஜெயராம் தலையில் பலமாக அடிப்பட்டுள்ளது என்றும், நெற்றி காயம் மற்றும் மேசை விளிம்பில் ரத்த கறையை வைத்து தடயவியல் நிபுணர் சோதனையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வாணி ஜெயராம் வீட்டுக்கு வெளியில் இருந்து எந்த நபரும் வரவில்லை என சிசிடிவியை ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது. தடயவியல்துறை அறிக்கை, பிரேத பரிசோதனை ஆய்வு அடிப்படையில் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நேரில் அஞ்சலி
திருமதி வாணி ஜெயராம் அவர்களின் இசைப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், வாணி ஜெயராமின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.


Click it and Unblock the Notifications











