பாட்டுப் பாடிக் கொண்டு இருந்த போதே பென்னி தயாளுக்கு ஏற்பட்ட விபத்து.. ஷாக்கான ரசிகர்கள்!
சென்னை: பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் கச்சேரி ஒன்றில் பாடிக் கொண்டிருக்கும் போது சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
38 வயதாகும் பென்னி தயாள் கடந்த 2002ம் ஆண்டு ரஜினிகாந்தின் பாபா படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான மாயா மாயா பாடல் பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தொடர்ந்து பல பாடல்களை பாடி உள்ள பென்னி தயாள் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல ஆண்டுகள் நடுவராகவும் பணியாற்றினார்.

பென்னி தயாள்
ஏகப்பட்ட பின்னணி பாடகர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ஏ.ஆர். ரஹ்மான் கண்டுபிடித்த மற்றுமொரு தரமான பின்னணி பாடகர் தான் பென்னி தயாள். பாபா படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான இவர், லேசா லேசா, ரவி கிருஷ்ணா நடித்த பொன்னியின் செல்வன், சிவாஜி, பொல்லாதவன், அழகிய தமிழ் மகன், தாம் தூம், ராவணன், அஞ்சான், 24, சமீபத்தில் வெளியான புஷ்பா மற்றும் ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.

சூப்பர் சிங்கர் ஜட்ஜ்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி என பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி வரும் பென்னி தயாள் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல சீசன்களுக்கு நடுவராக பங்கேற்றுள்ளார். சமீபத்தில், ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இனிமேல் சூப்பர் சிங்கர் ஷோவுக்கு ஜட்ஜாக வரமாட்டேன் என்று பென்னி தயாள் பேசியதும் பெரிய சர்ச்சையை கிளப்பியது.

திடீரென சரிந்த பென்னி தயாள்
சென்னையில் உள்ள விஐடி கல்லூரியில் இசைக்கச்சேரியில் கலந்து கொண்ட பென்னி தயாள் பாடிக் கொண்டிருந்த போது திடீரென அவர் சரிந்து விழுந்த காட்சியை பார்த்து ரசிகர்களும், கல்லூரி மாணவர்களும் பதறிப் போனார்கள். பின்னர், பென்னி தயாள் திடீரென சரிந்து விழ காரணம் என்ன என்பது தெரிய வந்த நிலையில், பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.
பதம் பார்த்த ட்ரோன்
பென்னி தயாளின் தலையில், நிகழ்ச்சியை படம் பிடிக்க வைத்திருந்த ட்ரோன் கேமரா மோதியதில் தான் இப்படியொரு எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது பலரையும் திகைப்பில் ஆழ்த்தி உள்ளது. திருமண விழாக்கள், கச்சேரிக்கள் என பல இடங்களில் தலைக்கு மேல் ட்ரோன் கேமராவை புஸ்ஸுன்னு பறக்க விட்டு வேடிக்கை காட்டுவார்கள், ஆனால், விளையாட்டு விபரீதம் ஆகும் என்பது போல இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில், பென்னி தயாளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரத்தான நிகழ்ச்சி
பென்னி தயாள் தலையில் ட்ரோன் மோதிய நிலையில், அவரை உடனடியாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அதன் காரணமாக இசை நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ட்ரோன் கேமராக்களை கையாள தெரியாமல் அதனை இயக்குபவர் செய்த தவறு தான் இதற்கு காரணம் என்றும் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











