பாடகர் ஜெயச்சந்திரன் உயிரிழந்தார்.. உடல் மறைந்தாலும் குரல் மறையாது.. வைரமுத்து இரங்கல்!
சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80. திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சற்று முன் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1944ம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்த பி.ஜெயச்சந்திரன். இசையின் மீது இருந்த ஆர்வத்தால், இசையை கற்றுக்கொண்ட இவர், சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் முதன்முதலாக மேடை ஏறி பாடினார். அதைத்தொடர்ந்து தான், அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு வந்தது. இதையடுத்து குஞ்சாலி மரக்கார் என்ற மலையாளப் படத்தில் படத்தில் முதன் முதலில் பாடினார். ஆனால், அந்த படம் வெளிவருவதற்கு முன் களித்தோழன் படம் வெளியாகி அதுவே அவரின் முதல் பாடலாக மாறியது.

பாடகர் ஜெயச்சந்திரன்: அதைத்தொடர்ந்து தமிழ் திரைப்படத்தில் பல ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார். மூன்று முடிச்சு படத்தில் வரும் வசந்த கால நதிகளிலே பாடல்,கிழக்கே போகும் ரயில் படத்தில் வரும் மாஞ்சோலை கிளிதானோ,கடல் மீன்கள் படத்தில் தாலாட்டுதே வானம் பாடலும், வைதேகி காத்திருந்தாள் படத்தில் காத்திருந்து காத்திருந்து கலங்கள் போனதடி பாடலும், ராசாத்தி உன்ன தமிழ் சினிமாவில் காலத்தால் என்றும் அழியாத பல பாடல்களை பாடி உள்ளார்.
உயிரிழந்தார்: கிட்டத்தட்ட 16,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கும் பி ஜெயசந்திரன், சிவசங்கர சர்வ சரண்ய விபோ பாடலுக்காக 1975ம் ஆண்டு சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றார். தன்னுடைய தெய்வீக குரலால் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஜெயசந்திரன் இன்று உயிரிழந்தார். 80 வயதான ஜெயசந்திரன், உடல்நலக் குறைவு காரணமாக கேரளாவில் உள்ள திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
வைரமுத்து இரங்கல்: பாடகர் ஜெயசந்திரனின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த வைரமுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து கவிதை வெளியிட்டுள்ளார்.
பாடகர் ஜெயச்சந்திரன்
காலமானார் என்ற செய்தியால்
கண்கள் நீர்கட்டின
'கொடியிலே மல்லிகைப்பூ'
மறக்க முடியுமா?
'தெய்வம் தந்த பூவே'
காற்றில் கரையுமா?
'என்மேல்விழுந்த
மழைத்துளியே'
மண்ணில் மறைந்துபோகுமா?
எத்துணை எத்துணை பாடல்கள்
அத்துணையும் முத்துக்கள்
பழக இனியவர்;
பண்பாளர்
அவரை நான்
ஏழைகளின் ஜேசுதாஸ்
என்பேன்
அவர்
உடல் மறைந்தாலும்
குரல் மறையாது
'இன்று எழுதிய என்கவியே
இனிமேல் உன்னை
எவர் இசைப்பார்'
கனத்த மனத்தோடு
அஞ்சலியும்
ஆழ்ந்த இரங்கல் என பதிவுட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











