என் ரொம்ப நாள் பசி.. நான் இல்லைனு நினைச்சேன்.. மாரி செல்வராஜுக்கு நன்றி சொன்ன ரோஜா ரோஜா புகழ் சத்யன்
சென்னை: சோஷியல் மீடியாவில் அண்மையில் ரோஜா ரோஜா பாடலை கடந்த 1999ஆம் ஆண்டு மேடையில் பின்னணி பாடகர் சத்யன் பாடிய வீடியோ பயங்கரமாக ட்ரெண்டானது. அதனையடுத்து மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார் அவர். சூழல் இப்படி இருக்க துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் பைசன் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார் சத்யன். அதுவும் பயங்கர ஹிட்டாகியிருக்கிறது.
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சத்யன் மகாலிங்கத்துக்கு சிறு வயதிலிருந்தே இசை மீது ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக முறையாக சங்கீதத்தை கற்றுக்கொண்டு மேடை கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். சின்ன வயதிலேயே பெரிய நிகழ்ச்சிகள், மேடைகள் என அத்தனையையும் பார்த்து தனது குரலால் அனைவரையும் வசீகரப்படுத்தி வைத்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
திரைத்துறையில் சத்யன்: படிப்படியாக தனது திறமையை வளர்த்துக்கொண்ட அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற கலக்கப்போவது யாரு என்ற பாடலை பாடி திரைத்துறையில் அறிமுகமான அவர்; தொடர்ந்து அறிந்தும் அறியாமலும் படத்தில் இடம்பெற்ற சில் சில், சரோஜா படத்தில் இடம்பெற்ற தோஸ்த் படா தோஸ்த், அவன் இவன் படத்தில் இடம்பெற்ற அவனப்பத்தி நான் பாடப்போறேன் என 150க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார் அவர்.

காணாமல் போன சத்யன்: மிகச்சிறந்த திறமையாளரான அவர் கண்டிப்பாக பெரிய இடத்தை அடைவார் என்று பலரும் கணித்திருந்தார்கள். ஆனால் காலங்கள் மாறி தமிழ் சினிமாவில் பாடல்களின் போக்கும் மாறியதில் சத்யன் காணாமல் போனார். சூழல் இப்படி இருக்க காதலர் தினம் படத்தில் இடம்பெற்ற ரோஜா ரோஜா பாடலை அவர் சிறு வயதாக இருந்தபோது சாதக பறவைகள் என்ற மேடை நிகழ்ச்சியில் பாடிய வீடியோ ஒன்று திடீரென ட்ரெண்டாக ஆரம்பித்தது.
மீண்டும் வெளிச்சத்தில்: அந்த வீடியோ பயங்கரமாக பரவி; பலரும் யார் இவர் என்று தேட ஆரம்பித்தார்கள். அதேசமயம் அவரை ஏற்கனவே அறிந்தவர்கள் இப்போதாவது சத்யனின் அருமை புரிகிறதே என கூறி அவர் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்ததற்கு மகிழ்ச்சியடைந்தார்கள். சூழல் இப்படி இருக்க விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் பைசன் படத்தில் பாடல் ஒன்றை இப்போது பாடியிருக்கிறார்.
சத்யனின் நன்றி: இதுகுறித்து அவர் கூறுகையில், "நன்றியை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை. தென்னாட்டு பாடல் வாய்ப்பை எனக்கு கொடுத்த மாரி செல்வராஜ் மனது வைக்கவில்லை என்றால் இந்தப் பாடல் எனக்கு கிடைத்திருக்காது. நன்றி என்ற ஒரு வார்த்தையில் உணர்ச்சியை அடக்க முடியாது. இது என் ரொம்ப நாள் பசி. நான் அவ்வளவுதான், இனி சினிமாவில் கிடையாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி" என்றார்.


Click it and Unblock the Notifications











