மகன் உயிரை பறித்த எமன்.. தள்ளாத வயதில் தனிமையில் தவிக்கும் எஸ் ஜானகி அம்மா.. மகனின் கண்ணீர் கதை!
சென்னை: இசை உலகின் அம்மா என ரசிகர்களால் அழைக்கப்படும் எஸ் ஜானகி அம்மா அவர்கள். தன்னுடைய ஒட்டுமொத்த பாசத்தையும் கொட்டி வளர்த்த ஒரே மகனை தனது தள்ளாத வயதில் பறிகொடுத்துள்ளார். இது காலத்தின் உச்சபட்ச கொடுமையாகும், இந்த இழப்பை தாங்கக்கூடிய தைரியத்தை இறைவன் ஜானகி அம்மாவிற்கு தரவேண்டும். இந்த செய்தியில் ஜானகி அம்மாவின் வாழ்க்கை பயணத்தையும், அவரின் மகனின் கசப்பான வாழ்க்கையை பற்றி பார்க்கலாம்.
1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி ஆந்திரா மாவட்டத்தில் உள்ள ரேவல்லா என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் எஸ். ஜானகி. மராத்திய மொழி பேசும் குடும்பத்தில், செஸ்லா ராமமூர்த்தி மற்றும் சத்யவதி தம்பதிக்கு கடைக்குட்டி மகளாக பிறந்தவர் தான் செஸ்லா ஜானகி. ஜானகியின் தந்தை ஒரு ஆயுர்வேதா மருத்துவர் ஆவார். தந்தையின் பணி நிமித்தமாக ராஜமுந்திரிக்கு இவர்களது குடும்பம் இடம்பெயர்ந்தது. அப்போது எஸ் ஜானகி பிரபல நாதஸ்வர வித்துவானிடம் விளையாட்டாக இசை கற்றுக்கொண்டார். அதன் பின் ஜானகி, 'ஆல் இந்தியா ரேடியோ' நடத்திய பாடல் போட்டியில் கலந்து கொண்டு குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்திடம் பரிசை வென்றார்.

பாடகி எஸ் ஜானகி: இதையடுத்து சந்திரசேகரன் நடத்தி வந்த கலை நிகழ்ச்சியில் சினிமா பாடல்களை பாடி வந்த எஸ் ஜானகி. சந்திரசேகர் அவர்களின் மகன் ராம் பிரசாத்தை ஒருதலையாக காதலித்து வந்தார். அதன்பின், 1959 ஆம் ஆண்டு ராம் பிரசாத்திற்கும் எஸ் ஜானகிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் ஜானகியின் மாமனார் சந்திரசேகர், ஜெமினி நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்திற்கு பிறகு தான் மாத சம்பளத்தில் எஸ் ஜானகி ஜெமினி நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின் 'விதியின் விளையாட்டு' என்ற படத்தின் மூலம் முதன்முதலாக எஸ் ஜானகி சினிமாவில் பாடகியாக அறிமுகம் ஆனார். ஆனால், அந்தத் திரைப்படம் வெளியாகாமல் போனது. பி.பி. ஸ்ரீனிவாஸ் உடன் இணைந்து பாடிய பாடல் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருடன் பல டூயட் பாடல்களை பாடினார் எஸ் ஜானகி.
கணக்கில்லாத விருது: எஸ் எம் சுப்பையா நாயுடு, கே. வி மகாதேவன். எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீகாந்த் தேவா என இந்த காலத்து அனிருத் வரை அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி உள்ளார். 2016 ஆண்டு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த ' திருநாள்' என்ற திரைப்படத்திற்காக அவர் பாடியது தான் கடைசி பாடல் என அறியப்படுகிறது. மூச்சுமுட்டும் அளவுக்கு தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கிய எஸ் ஜானகி, 2013 ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை தனக்கு கிடைத்த தாமதமான விருது எனக்கூறி அதை நிராகரித்தார். 17க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் பல்வேறு நாட்டு மொழி பாடல்கள் என 80,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார் எஸ் ஜானகி.

மகன் முரளி கிருஷ்ணா: சினிமாவில் இசையின் மூலம் பல சாதனைகளை நிகழ்த்தி உள்ள எஸ் ஜானகிக்கு பக்கபலமாக இருந்தது அவருடைய கணவர் ராம்பிரசாத் என்பதையும் யாராலும் மறுக்கவே முடியாது. அந்த அளவிற்கு ஜானகி அவர்களின் இசை வாழ்வில் ஏணி படியாக இருந்தார். இவர்களின் அன்பின் அடையாளமாக 1960 ஆம் ஆண்டு முரளி கிருஷ்ணா என்ற மகன் பிறந்தார். ஒரே ஒரு செல்ல மகன் முரளி கிருஷ்ணா தொழில்முனைவோராக இருந்தார். இவர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நாட்டி கலைஞரும், சுபசீலா அகாடமி என்ற நாட்டிய கலை நிறுவனத்தையும் நடத்தி வரும் உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அமிர்தவர்ஷினி மற்றும் அப்சரா என இரு மகள்கள் பிறந்த நிலையில், முரளி கிருஷ்ணா மற்றும் உமா தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பரஸ்பரமாக விவகாரத்து பெற்று பிரிந்தனர்.
பெரும் வேதனையில் ஜானகி அம்மா: முரளி கிருஷ்ணாவின் இரு மகள்களும் கல்வியில் தேர்ச்சி பெற்று திருமணமும் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வந்த நிலையில், இவர்களின் மூத்த மகள் அமிர்தவர்ஷினி அமெரிக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இளைய மகள் யோகா கற்றுத் தரும் நிபுணராக இருக்கிறார். எஸ் ஜானகியுடன் சென்னையில் வசித்து வந்த முரளி கிருஷ்ணா, தனது தாயாருடன் ஹைதராபாத்தில் உள்ள வீட்டிற்கு இடம் பெயர்த்தார். ஏற்கனவே காதல் கணவரை இழந்து மன வருத்தத்தில் வாடி வந்த எஸ் ஜானகி, தனது மகன்தான் ஒரே துணை என இருந்த நிலையில், முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி 22 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக 65வயதில் உயிரிழந்தார். அவரின் இறுதி சடங்கை இளைய மகள் அப்சரா செய்ததாக செய்திகள் ஊடகத்தில் வெளியானது. இறுதி வரை துணையாக இருப்பான் என நினைத்த மகனை பறிகொடுத்துவிட்டு இந்த தள்ளாத வயதில் ஜானகி அம்மா பெரும் துயரத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications











