Vijay Yesudas Divorce: கஷ்டமா இருக்கு.. வேற வழி இல்ல..விவாகரத்து குறித்து ஓபனாக பேசிய விஜய் ஜேசுதாஸ்
சென்னை: சினிமா பிரபலங்களின் சொந்த வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ள மக்களுக்கு எங்கிருந்துதான் இத்தனை ஆர்வம் வருகின்றது என்றே தெரியவில்லை. ஒருகட்டம் வரை நடிகர்களை கொண்டாடி வந்த ரசிகர்கள் ஒருகட்டத்திற்கு மேல் அவர்களின் சொந்த வாழ்க்கை குறித்தும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர். சினிமா பிரபலங்கள் அணிந்துள்ள உடையில் இருந்து அவர்கள் புதிதாக வாங்கிய கார், வீடு குறித்தெல்லாம் தெரிந்து கொள்ள ரசிகர்களுக்கு எப்போதும் ஆர்வம்தான். ஆனால் இது ஒருகட்டத்திற்கு மேல் சினிமா பிரபலங்களின் சொந்த வாழ்க்கையான திருமணம், விவாகரத்து போன்றவை குறித்தும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் பாடகர் மற்றும் நடிகர் விஜய் யேசுதாஸ் தனது மனைவி தர்ஷனாவைப் பிரிந்ததற்கான காரணத்தை பொதுவெளியில் பேசியுள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
அண்மையில் விவாகரத்துக்காக மிகவும் அதிகமாக பேசப்பட்ட பிரபலம் என்றால் அது ஜெயம் ரவிதான். அவர் தனது மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இவர் இவ்வாறு அறிவித்ததும் இவர்களின் பிரிவுக்கு பிரபல பாடகி ஒருவர் காரணம் என பலரும் பலவிதமாக பேசினர். ஆனால் இதற்கு ஜெயம் ரவி ஒரே அடியாக பதில் கொடுத்து அனைவரது வாயையும் அடைத்தார். பர்சனல் விஷயங்கள் குறித்து யாரும் பேசாதீங்க. பர்சனல் பர்சனலாக விட்டுடுங்க என கண்ணியமாகக் கூறினார். மேலும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட, இப்போது உள்ள ரசிகர்களுக்கு, பர்சனல் விசயங்கள் குறித்து புரிந்து கொள்ளும் அறிவு இருக்கின்றது என பேசியிருந்தார்.

அதேபோல், நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்தை அறிவித்தபோதும், இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் மற்றும் சைந்தவி விவாகரத்தை அறிவித்தபோதும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்திதான் ஏற்பட்டது. மேலும் திரைத்துறையில் யார் விவாகரத்து செய்தாலும் பலரும் இணையத்தில் ஒரு குறிப்பிட்ட நடிகரை மட்டுமே காரணமாகக் கூறி கிசுகிசுத்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

விவாகரத்து: ஆனால் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் லிவிங்ஸ்டன் விவாகரத்து குறித்து பேசுகையில் மிகவும் தெளிவான பார்வையை பலருக்கு ஏற்படுத்தினார். அதாவது அவர் பேசுகையில், " ஒருவன் குடிப்பான், அடிப்பான் அவனோடு அந்த பெண் வாழவேண்டுமா? அவனை விட்டுவிட்டு வேறு ஒருவனுடன் வாழலாமே? ஒருமுறை அடிபட்டு இருகாங்க, அடுத்தமுறை தனது பார்ட்னரை சரியா தேர்வு செய்யனும்னு கவனமா இருப்பாங்க. இந்த சமூகத்தைப் பற்றி கவலைப் படாதீர்கள். இந்த சமூகம் வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். நீங்க ரொம்ப நல்லா வாழ்ந்தா, என்னமா வாழ்றான்னு சொல்லுவாங்க. எவன் வாழ்த்துவான் சொல்லுங்க.

வாழ்க்கை: உங்க சொந்த பந்தத்துல நீங்க நல்லா இருப்பது யாருக்காவது புடிக்கும்னு நெனச்சுட்டு இருக்கீங்களா? இப்போ ஒருவருக்கு விவாகரத்து நடைபெறுகின்றது அதனைத் தவறுனு சொல்லுவீங்களா? அதைத் தவறுனே சொல்ல முடியாது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கின்றார் என்பது யாருக்குத் தெரியும்? நீங்கள் குடும்பம், மானம், சொந்தம், மரியாதை இப்படி வாழ்ந்தீங்கனா, அது வாழ்க்கையில ஒரு பகுதிதான்" என பேசியிருந்தார்.

விஜய் யேசுதாஸ்: இந்நிலையில் பாடகர் விஜய் யேசுதாஸ் தனது விவாகரத்து குறித்து பேசுகையில், " நானும் எனது மனைவியும் பரஸ்பரமாக பேசி இந்த முடிவினை எடுத்தோம். எங்களின் இந்த முடிவில் பெற்றோர்களுக்கு துளியும் விருப்பம் இல்லை. மேலும் அவர்களுக்கு இது கஷ்டத்தைத்தான் கொடுத்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், எங்களது மகளுக்கு 15 வயது ஆகின்றது. எங்களுக்குள் என்ன நடக்கின்றது என்பதை மகளால் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் மகனுக்கு 9 வயது மட்டுமே ஆகின்றது. மகனுக்கு இப்போது என்ன நடக்கின்றது எனத் தெரியவில்லை என்றாலும் பிற்காலத்தில் புரிந்து கொள்வார் என நம்புகின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











