A.R.Rahman - அப்படி மட்டும் பேசாதீங்க ப்ளீஸ் - மனைவிக்கு ஆர்டர் போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியிடம் அன்பு கட்டளை விதித்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர். ரஹ்மான். தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைவரது வரவேற்பையும் பெற்று தேசிய விருதையும் பெற்றார். அதன் பிறகு ரஹ்மான் போட்ட மெட்டெல்லாம் ஹிட்டாக பாலிவுட்டுக்கு சென்று அங்கும் தனது கொடியை பறக்கவைத்தார். இதனால் இந்தியா முழுவதும் அறியப்படும் இசையமைப்பாளராக மாறினார்.

இரண்டு ஆஸ்கர்களை அள்ளிவந்த தமிழன்: பாலிவுட்டில் இசையமைத்துக்கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இந்தியாவில் எப்படி அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றாரோ அதேபோல் ஹாலிவுட்டிலும் தான் அறிமுகமான முதல் படத்திலேயே கோல்டன் க்ளோப் விருதுகளையும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்று அசத்தினார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் தொடர் இசை நிகழ்ச்சிகள்: திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி தொடர்ந்து வெளிநாடுகளில் அவர் இசை நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறார். அப்படி அவர் கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடத்திய இசை நிகழ்ச்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. கடந்த ஜனவரி மாதம்கூட மலேசியாவில் அவர் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அந்த இசை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
பொன்னியின் செல்வன் 2: ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. தொடர்ந்து பத்து தல திரைப்படம் வெளியானது.வரும் ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீஸாகவிருக்கிறது. அதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாமன்னன் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

தமிழில் பேசுங்க ப்ளீஸ்: இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார். அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவியும் மேடைக்கு அழைக்கப்பட்டார். அதனையடுத்து அவரை ஓரிரு வார்த்தைகள் பேசுமாறு தொகுப்பாளர்கள் கேட்க; அவரும் பேச ஆரம்பித்தார்.
அந்த சமயத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், ஹிந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்க ப்ளீஸ் என அன்புடன் கேட்டுக்கொண்டார். இதனைக் கேட்டு மேடைக்கு கீழே அமர்ந்திருந்த இயக்குநர் மணிரத்னம், நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் பலமாக சிரித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியிடம் இவ்வாறு கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











