நல்ல படங்களை ஆதரியுங்கள், ஆபாசப் படங்களைப் புறக்கணியுங்கள்: வி.எஸ்.ராகவன் வேண்டுகோள்
ஈரோடு: நல்ல படங்களை ஆதரிக்குமாறும், ஆபாசப் படங்களைப் புறக்கணிக்குமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பழம்பெரும் நடிகரான வி.எஸ்.ராகவன்.
நேற்று, ஈரோட்டில் கொங்கு கலையரங்கில், கவிதாலயம் இசைப்பள்ளி மற்றும் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் சார்பில் பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
அப்போது, வி.எஸ். ராகவன் தெரிவித்ததாவது...

அறிமுகம்....
1954-ஆம் ஆண்டு வெளிவந்த "வைரமாலை' என்ற தமிழ்ப்படத்தில் முதன்முறையாக நான் அறிமுகம் ஆனேன்.
அப்பா கேரக்டர்....
முதலில் நாடகத்திலும் பிறகு சினிமாவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வருகிறேன். பெரும்பாலும் தந்தை கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறேன்.
ஆரோக்கிய சினிமா....
என்னைப் பொருத்த வரை சினிமா என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமே தவிர, ஆபாசமாக இருக்கக் கூடாது.
ஆதரவும் புறக்கணிப்பும்....
நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். ஆபாசப் படங்களை மக்கள் புறக்கணித்தால் மீண்டும் ஆபாசப் படங்களை தயாரிக்க அஞ்சுவார்கள்.
திருப்தியான படங்கள்...
நான் நடித்ததிலேயே, சவாலே சமாளி, வாழையடி வாழை ஆகிய படங்கள் எனக்கு திருப்தி தந்த படங்களாக அமைந்தன.
நாகேஷால் வந்த நகைச்சுவை...
திரையுலகில் நாகேஷுடன் பழகிய பிறகுதான் நகைச்சுவையாகப் பேசுவதைக் கற்று கொண்டேன்.
சாகும் வரை நடிக்க ஆசை...
எனக்கு இப்போது 89 வயதாகி விட்டது. சாகும் வரையிலும் நடித்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











