இந்திய சினிமா ஜாம்பவான் திலீப் குமார் மறைவு... பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்
டெல்லி : இந்திய சினிமாவின் ஜாம்பவான் திலீப் குமார் உடல் மூப்பு காரணமாக மும்பையில் உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டவர்களும் திலீப் குமாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் திலீப் குமார்
இந்திய சினிமாவின் மறக்க முடியாத அங்கமாக திகழ்ந்தவர் நடிகர் திலீப் குமார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை உற்சாகப்படுத்திய திலீப் குமார், வயது மூப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக நடிக்காமல் ஓய்வு எடுத்து வந்தார்.

தீவிர சிகிச்சை
கடந்த சில மாதங்களாக இவர் வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வந்தார். இதனிடையே மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் 30ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பிரதமர் மோடி அஞ்சலி
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவருக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் திலீப் குமாரின் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கலை உலகிற்கு இழப்பு
திலீப்குமார் சினிமாவின் ஜாம்பவானாக அறியப்படுகிறார். அவரது சிறப்பான நடிப்பால் அனைத்து தலைமுறையினர் அவரை கொண்டாடுகின்றனர். அவரது மறைவு கலை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்துள்ள அவர், அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்ளுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி இரங்கல்
இதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் திலீப் குமாரின் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், இந்திய சினிமாவில் திலீப்குமாரின் அதிகப்படியான பங்களிப்பு பல தலைமுறைகளுக்கு நினைவில் வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











