திரௌபதி படத்தை தியேட்டரில் பார்த்த பாஜக எச் ராஜா.. பாமக ராமதாஸ்.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
சென்னை: இரு சமூகங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் திரௌபதி படத்தை பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் பார்த்து ரசித்துள்ளனர்.
Recommended Video
இயக்குநர் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் திரௌபதி. க்ரவுட் ஃபன்டிங் முறையில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கும் எதிர்ப்புக்கும் நடுவில் இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களில் படத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

ரிச்சர்ட் ரிஷி
இப்படத்திற்கு ஜூபின் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் திரௌபதி படத்தில் ரிச்சர்ட்டின் நடிப்பு பாராட்டை பெற்றுள்ளது. திரௌபதி படத்தில் சிலம்ப ஆசிரியராக நடித்திருக்கிறார் நடிகர் ரிச்சர்ட் ரிஷி. இதேபோல் திரௌபதியாக நடித்திருக்கும் ஷீலாவும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆணவக்கொலை..
வழக்கறிஞராக வரும் நடிகர் கருணாஸ், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நிஷாந்த் மற்றும் கோபி, இளங்கோ உள்ளிட்டவர்களும் தங்களின் அற்புதமான படத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஆணவக் கொலை என்று வருகிற செய்திகளை அப்படியே நம்பாதீர்கள், பின்னணியில் உண்மை வேறுமாதிரி இருக்கிறது என்று சொல்லும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ்
இந்நிலையில் இந்தப் படத்தை பாஜக தேசிய செலாளரான எச் ராஜா திரையரங்கிற்கு சென்று சிறப்புக் காட்சியை பார்த்திருக்கிறார். இதேபோல் பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து திரௌபதி படத்தை பார்த்து ரசித்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.
வயதிற்கு வந்த குழந்தைகளுடன்..
இந்நிலையில் திரௌபதி படம் குறித்து எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது, இன்று திரௌபதி திரைப்படம் பார்த்தேன். அனைத்து பெற்றோரும் தங்களுடைய வயதிற்கு வந்த பெண் குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய படம். நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு நல்ல படம் பார்த்த நிறைவு என தெரிவித்திருக்கிறார்.
தவறாமல் பார்க்கனும்
இதேபோல் பாமக நிறுவனர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பாட்டாளிகளுடன் திரௌபதி திரைப்படம் பார்த்தேன். இன்றைய சமூகத்திற்கு தேவையான பல செய்திகளைச் சொல்லும் படம். பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் படம். பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம்! என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











