மணிரத்னம் படத்தை திடீரென பாராட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ்...கவர்ந்ததற்கு என்ன காரணம்?
சென்னை : மணிரத்தினம் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால்.
இலங்கை இனப்பிரச்சனையை கதைக்கருவாகக் கொண்டு உருவான இந்த படத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ்,கீர்த்தனா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தை சமீபத்தில் பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டி உள்ளார்.

கன்னத்தில் முத்தமிட்டால்
போராளியாக இருக்கும் தன் தாயிடம், என்னை ஏன் விட்டுட்டு போன என கேள்வி கேட்க துடிக்கும் சிறுமி தான், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் கரு. மணிரத்னத்தின் இன்னுமொரு, மாஸ்டர் பீஸ் படைப்பு இதுவாகும். இலங்கை இனப் பிரச்னை பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது என்றாலும், அப்போராட்டம் குறித்தும், தீவிர அரசியல் குறித்தும் பேசாமல், ஈழ விஷயத்தில், மணிரத்னம் விரும்பிய அமைதி இந்த படைப்பில் பிரதிபலித்தது

சிறப்பான பாடல்
இந்த திரைப்படத்திற்கு மற்றுமொரு சிறப்பாக அமைந்தது பாடல்கள். ஏ.ஆர். ரகுமான் இசையில் ஒவ்வொரு பாடல்களும் மனதை வருடியது எனலாம். ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் சின்மயீ-ன் குரலில் காதுகளில் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டு இருக்கிறது. மேலும், வைரமுத்துவின் வரியில் விடை கொடு எங்கள் நாடே பாடல் ஈழத்தின் சோகத்தை முன் நிறுத்தியது.

விரசமில்லாத, உணர்வுமயமான படம்
இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தை பாராட்டி உள்ளார். அதில், மணிரத்தினம் இயக்கி 20 ஆண்டுக்கு முன் வெளியான 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படம் பார்த்தேன். இலங்கைப் போரில் பாதிக்கப்பட்டு, தமிழ்நாட்டு பெற்றோரால் வளர்க்கப்பட்ட குழந்தை, வளர்ந்தவுடன் தாயைக் காணத்துடிப்பது தான் கதை. விரசமில்லாத, உணர்வுமயமான, சிறப்பான படம்! என பதிவிட்டுள்ளார்.

சிறப்பான படங்கள்
அதே போல, சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் ராம் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசியல் நிகழ்ச்சிகளுக்கு வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளதால், தனது நண்பர்கள் பரிந்துரைக்கும் சிறப்பான திரைப்படங்களை பார்த்து வருவதாக கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











