For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாடலாசிரியர் அண்ணாமலை... வெளிப்படை… மறைபொருளற்ற திறந்த மனம்!

  By Shankar
  |

  - கவிஞர் மகுடேசுவரன்

  தமிழ்த் திரைப்பாடல் நலங்களை விவரிக்கும் என்னுடைய கட்டுரைகளின் தொகுப்பு நூல் 'பாட்டுத் திறம்' என்ற தலைப்பில் புலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. காட்சிப்பிழை இதழில் வெளியான கட்டுரைகள் அவை.

  அந்நூலுக்குச் சென்னைத் திருவான்மியூர்ப் பனுவல் புத்தக அங்காடியில் அறிமுக நிகழ்வொன்றைப் புலம் உலோகநாதனும் பரிசல் செந்தில்நாதனும் ஏற்பாடு செய்திருந்தனர்.

  Poet Magudeswaran on late Lyricist Annamalai

  அவ்விழாவுக்கு யாரைப் பேசச் செய்வது என்று என்னைக் கேட்டார்கள். விழா ஏற்பாட்டாளர்களின் விருப்பப்படி ஆகட்டும் என்று கூறிவிட்டேன்.

  அந்நூல் தமிழ்த் திரைப்பாடல்களைப் பற்றியதால் தற்காலப் பாடலாசிரியர் ஒருவர் பேசவேண்டும் என்று விழா அமைப்பினர் விரும்பினர். நா. முத்துக்குமாரிடம் பேசினார்கள் என்று நினைக்கிறேன். அவரும் வருவதாகச் சொன்னவர் பிறகு வரவில்லை. வருவதாகச் சொல்லிவிட்டு வரத்தவறிய எண்ணற்ற நிகழ்ச்சிகள் நாமுக்கு உண்டு. பிறகுதான் அவர்க்கு மாற்றாக 'பாடலாசிரியர் அண்ணாமலை உங்கள் நூல் குறித்துப் பேசுவார்' என்றார்கள்.

  அண்ணாமலையும் சுகிர்தராணியும் பேச்சாளர்கள். சுகிர்தராணியைக் கவிதைப் பரப்பில் அறிந்ததுபோல் நான் அண்ணாமலையை அறிந்திருக்கவில்லை. 'அவரே உங்களிடம் பேசுவார்' என்றார்கள்.

  அடுத்த சில மணித்துளிகளில் அண்ணாமலை தொலைவிளித்தார்.

  'மகுடேசுவரன்களா... நான் பாடலாசிரியர் அண்ணாமலை பேசறேன்...' என்றார். தம்மைக் கவிஞர் என்று கூறிக்கொள்ளாமல் பாடலாசிரியர் என்று கூறிக்கொண்ட அவருடைய தெளிவு எனக்கு உடனே பிடித்துப் போயிற்று.

  'என்னைக் கேள்விப்பட்டிருக்கீங்களோ இல்லையோ தெரியாது... உங்களை எனக்கு இருபது வருசமாகத் தெரியும்' என்றார். தொண்ணூறுகளில் நான் கணையாழியில் எழுதிக்கொண்டிருந்தபோது அங்கேயும் அண்ணாமலை என்ற உதவியாசிரியர் இருந்தார். ஒருவேளை அவராக இருப்பாரோ என்று ஐயுற்றேன். இல்லை.

  Poet Magudeswaran on late Lyricist Annamalai

  தாம் ஆனந்தவிகடனில் பணியாற்றியதாகவும் விகடனில் நான் எழுதிய ஒவ்வொரு கவிதையையும் அப்போதே படித்துச் சுவைத்து மகிழ்ந்ததாகவும் தெரிவித்தார். என் கவிதைகள் பலவற்றையும் சொல்பிறழாமல் ஒப்பித்தார். எனக்கு வெட்கமாகிவிட்டது. ஏனென்றால் என் கவிதைகளை மனனமாய் வைத்திருக்கும் பழக்கத்தைத் துறந்திருந்தேன்.

  'வாழ்ந்துகெட்டவனின் பரம்பரை வீட்டை விலைமுடிக்கும்போது உற்றுக்கேள் கொல்லையில் சன்னமாய் எழும் பெண்களின் விசும்பலை...' என்ற கவிதையை மீண்டும் நினைவுகூர்ந்தார். அடுத்து 'பாட்டுத் திறம்' நூலை நோக்கி நகர்ந்தார். நூலைப் படித்து முடித்த நிலையில்தான் என்னை அழைத்திருக்கிறார்.
  ஒவ்வொரு கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்த பொருள்கள் பலவற்றையும் மகிழ்ந்து போற்றினார். 'பாடல் எழுத விரும்புவோர்க்கு இதைப் பாடப் புத்தகமாக வைக்கவேண்டும்ங்க' என்றார். இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக நீடித்த எங்கள் தொலைபேசி உரையாடல் உவகையுடன் முடிந்தது.

  விழாவுக்கு நான் சென்னை சென்றிருந்தேன். புலம் உலோகநாதன் என்னைப் பனுவலுக்கு இட்டுச் சென்றார். முன்னதாகவே சுகிர்தராணியும் அண்ணாமலையும் வந்திருந்தனர். அண்ணாச்சி ராஜசுந்தரராஜன், கே. என். சிவராமன், யுவகிருஷ்ணா, அதியமான், தேன்மொழிதேவி, இனியன் ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அந்நூலைக் குறித்த அண்ணாமலையின் அறிமுக உரை சிறப்பாக அமைந்தது. நிகழ்ச்சி முடிவில் பாட்டுத்திறம் நூலில் எடுத்தாளப்பட்ட 'மாங்குயிலே பூங்குயிலே' பாட்டை நாங்கள் அனைவரும் பாடினோம்.

  தனிப்பட்ட முறையில் அண்ணாமலையோடு பேசிக்கொண்டிருந்ததுதான் மறக்க முடியாதது. தம்மைக் குறித்த எந்த உயர்வு மனப்பான்மையுமில்லாமல் இயல்பான மனிதராக அண்ணாமலை இருந்தார். தம் பத்திரிகையுலக அனுபவங்கள் பலவற்றைச் சொன்னார். 'நாம் எதையாவது சாதிக்க நினைத்தால் முதலில் செய்யவேண்டியது, மாசச் சம்பளத்தால் கிட்டும் பாதுகாப்பான வாழ்க்கையிலிருந்து துணிந்து வெளியேறுவதுதான். அதைத்தான் நான் செஞ்சேன்...' என்றார்.
  நெடுநாள் பார்த்துவந்த விகடன் பணியை விடுத்து, திரைப்பாடல் முயற்சிக்காகத் துணிந்து வெளியேறினார். 'இப்போ வருமானம் பரவாயில்லைங்களா ?' என்று கேட்டேன். 'என்ன நினைச்சிட்டீங்க... இப்ப வந்துச்சே கிரிஷ்னு ஒரு படம்... இந்தியிலிருந்து தமிழுக்கு டப்பிங்... எல்லாப் பாட்டும் நான்தான் எழுதினேன். சுளையா இரண்டு லட்சம் கொடுத்தான்...' என்றார்.

  சத்தியமாகச் சொல்கிறேன்... தம் வருமானத்தை ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படையாகச் சொன்ன ஒரே திரைப்படக்காரர் அண்ணாமலைதான். அவ்வளவு வெளிப்படை... மறைபொருளற்ற திறந்த மனம். இதை இந்நேரத்தில் சொல்வதில் தவறில்லை என்றுதான் நானும் மறைக்காமல் எழுதுகிறேன்.

  'ஆனால் உரிய வாய்ப்புக்காக பொறுமையாய்க் காத்திருக்க வேண்டும்' என்றார்.

  'என்னங்க என் உச்சி மண்டைல சுர்ருங்குது... கிர்ருங்குது... டர்ருங்குது...ன்னு எழுதிட்டிருக்கீங்க ?' என்றேன்.

  'அதை ஏன் கேட்கறீங்க.... கம்போசிங்ல உட்கார்ந்திருந்தோம்... ஒன்னும் தோனலை. விஜய் ஆண்டனி என்னை நைட் முழுக்க பாட்டெழுதிட்டிருக்கும்படி சொல்லிட்டு வீட்டுக்குப் போய்ட்டாரு. ரெகார்டிங் ஸ்டுடியோ சாவிகூட என்கிட்டதான். நடுராத்திரி ஆகிப்போச்சு.... ஒரு சிகரெட் குடிக்கலாம்னு வெளியே வந்து பார்த்தேன். ஒரு கடைகூட இல்லை. ஒரே ஒரு பெட்டிக்கடை மட்டும் திறந்திருந்தது. ஆனா அவன்கிட்ட சிகரெட் இல்லை. வேற என்னதான் இருக்குன்னு கேட்டேன். மூக்குப்பொடி இருக்குன்னான். சரி அதைத்தான் கொடுன்னு வாங்கிட்டு வந்து உட்கார்ந்தேன். முன்னபின்ன மூக்குப்பொடி போட்டதில்லையா... அளவுக்கதிகமாக மூக்குல வெச்சு உறிஞ்சிட்டேன். உச்சி மண்டையில சுர்ர்ர்ருனு ஏறிச்சு பாருங்க.... அப்ப தோனுச்சுங்க இந்த லைன். என் உச்சி மண்டைல சுர்ருங்குது....' என்றார். நான் சிரித்துவிட்டேன். 'பாட்டு எப்படியோ போகுது... இந்தப் பாடல் தோன்றிய காரணம் புதுசா இருக்குங்க' என்றேன். 'எப்படியோ விஜய்க்கு ஒரு ஹிட் பாட்டு அமைஞ்சிச்சு பாருங்க' என்று அவரும் சிரித்தார்.

  இன்னும் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தோம். விழா முடிந்து அனைவரும் ஒன்றாகச் சாப்பிட்டோம். மறுநாள் நான் ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டேனா என்பதுவரை அண்ணாமலை விசாரித்தபடி இருந்தார்.

  இன்று காலையில் அவர் மறைவுச் செய்தி வருகிறது. மாரடைப்பு.
  பழகுதற்கு எளிமையான மனிதர்கள் திடுமென்று மறையும்போது நம்புத்தி பேதலிக்கிறது.

  திரைப்படத்தில் அவர்க்கென்று வாய்ப்புகள் தொடர்ந்து வந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஓர் இசையமைப்பாளரின் ஓட்டத்தைத்தான் இன்றைய பாடலாசிரியரின் பயணம் சார்ந்திருக்கிறது. அண்ணாமலைக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி வந்தார். அவர் நடிக்கச் சென்றமையால் அண்ணாமலைக்குரிய வாய்ப்புகள் அருகினவா தெரியவில்லை.
  சென்னையின் விலைவாசியையும் திரைத்துறையின் காசோலை எகிறலையும் கணக்கில்கொண்டால் வாரம் ஒரு பாடலேனும் எழுத வேண்டும். அப்போதுதான் பாடலாசிரியராக வாழ முடியும்.

  பிற துறையினரைவிட, திரைத்துறையைச் சார்ந்தோரின் மன அழுத்தங்கள் கடுமையானவைதாம். வாழ்க்கையை இயல்பாகவும் எளிமையாகவும் வைத்துக்கொண்டாலும் நிலையாமைதான் வெல்கிறது.

  English summary
  Poet Magudeswaran's obituary to late Lyricist Annamalai.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X