twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாகுபலி தொடக்கமுமில்லை, முடிவுமில்லை!

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேஸ்வரன்

    எங்குப் பார்த்தாலும் பாகுபலி திரைப்படம் குறித்த உரையாடல்களைக் கேட்க முடிகிறது. திரைப்படக்காரர்கள் தொடவேண்டிய உயரத்தை அது கட்டியெழுப்பிவிட்டது. அவர்கள் கடக்கவேண்டிய சிகரம்போலவும் காட்சியளிக்கிறது. அதன் உருவாக்கமும் வெளியீட்டின்பின் செய்த பொருட்குவிப்பும் அத்தகைய நிலையைத் தோற்றுவித்துவிட்டது.

    எப்போதுமே தெலுங்கு தேயத்தில் உருவாகும் படங்கள் மிதமிஞ்சிய கூத்துக்கூறுகளோடு இருந்து வந்திருக்கின்றன. பன்மொழிப் படம் என்பதுபோல் கூறிக்கொண்டாலும் பாகுபலி தெலுங்குப் படம்தான். வாயசைவுக்கேற்பவே பிறமொழி உரையாடல்களைப் பொருத்தி, உரிய குரல் வளக் கலைஞர்களை வைத்துப் பேசச் செய்து வெளியிடப்பட்டதுதான். இதைப்போன்ற ஒரு பெரும்படம் பகாசுரச் சந்தைப்படுத்தல் முறைமைகளோடு பார்வையாளர்களை அடுத்த சில வாரங்களுக்குக் கட்டிப்போடுகையில் அந்தந்த மொழியின் திரைக் கலைஞர்கள் செயலற்றுப் போகிறார்கள். தம்முடைய ஆக்கங்கள் மீது தாழ்வு மனப்பான்மை கொள்ளும்படி நெருக்கப்படுகிறார்கள். அவ்வாறு தாழ்வுணர்ச்சி கொள்வது அறிவுடைமை இல்லைதான், என்றாலும் இது பணத்தை அள்ளிக்கட்டும் வணிகம் என்பதையும் மறுக்க முடியாது.

    Poet Magudeswaran's special article on Baahubali

    திரும்பிப் பார்த்தால், எப்போதுமே ஏதோ ஒரு தெலுங்குப் படம் தமிழ்நாட்டில் மொழிமாற்றமுற்று வெளியாகி, இங்குள்ள சந்தையை நன்றாகவோ தீதாகவோ ஒரு கலக்கு கலக்கிக்கொண்டே இருந்திருக்கிறது. அவ்வாறே தமிழ்த் திரைப்படங்களும் தெலுங்கு தேயத்தில் வெளியாகி வெற்றிக் கொடி கட்டுவதும் உண்டு. இது ஒரு கபடி விளையாட்டுத்தான்.

    பொதுவாக, நல்ல கதையமைப்புள்ள படங்கள் நம் நாட்டில் எல்லா மொழிகளிலும் மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்டு வெளியாகும். அது ஒருபுறமிருக்க, மொழிமாற்றுப் படங்கள் சத்தமில்லாமல் வெளியாகி மொழிப் படங்களுக்குரிய இடத்தைக் கேள்விக்குள்ளாக்கிவிடும்.

    ஜகன்மோகினி என்ற திரைப்படம் உங்களுக்கு நினைவிருக்கலாம். நான் முதன்முதலில் பார்த்த திரைப்படங்களில் ஒன்று அப்படம். அது வெளியானபோது தமிழ்நாடே திரையரங்குகளின் முன்னால் திரண்டது என்றால் மிகையில்லை. பெண்களே போதும்... அந்தத் திரைப்படத்தை ஓடோ ஓடென்று ஓடவைத்தார்கள். அப்போதெல்லாம் பெண்களுக்கென்றே தனிக் காட்சிகளை நடத்துவார்கள். இன்றைக்கும் ஜகன்மோகினி என்ற திரைப்படம் உருவாக்கிய தடம் பற்றி எண்ணற்ற படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. என் நண்பர் இயக்குநர் சார்லஸ் சொன்னார், "நம் நாட்டில் சிலவகைப் படங்களுக்கு வீழ்ச்சியே இல்லாத நிரந்தரச் சந்தை இருக்கிறது. அவற்றுள் தலையாயது பேய்ப் படங்கள், இன்னொன்று பாம்புப் படங்கள்..."

    எண்பதுகளில் சிரஞ்சீவியின் படங்கள் எல்லாமே மொழிமாற்றமாகி வந்தன. என் சிறுவத்தில் கண்ட சிரஞ்சீவியின் படங்கள் அனைத்துமே மொழி மாற்றப்படங்கள் என்பதை உணர்ந்தபோது ஏமாற்றமாய் உணர்ந்தேன். 'கைதி', 'பழிக்குப் பழி', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய படங்கள் தமிழ்நாடெங்கும் ஓடிக்கொண்டே இருந்தன. கைதி என்ற படம் அடுத்த ஏழெட்டாண்டுகளுக்கு நிற்காமல் ஓடியது. நான் அப்படத்தைப் பல்வேறு ஊர்களில் ஏழெட்டு முறை பார்த்திருக்கிறேன். திருப்பதிக்குப் போயிருந்தபோது தெலுங்கிலும் பார்த்தேன். பிறகு இடைநிலை நாயகர்கள் நடித்த குதிரைவீரர் படங்கள் பல வந்தன. சில்க் சுமிதா, மாதவி போன்றோர் துப்பாக்கியை ஏந்தியபடி குதிரையில் அமர்ந்து பறந்தார்கள். இந்தப் படங்களெல்லாமே திரைத்துறையினர்க்குக் காசுமழை பொழிந்தன என்று கூறவேண்டும்.

    இந்தப் போக்குக்கு மேலும் முத்தாய்ப்பாக இரண்டு படங்கள் வந்தன. முதற்படம் பூவொன்று புயலானது. இன்னொன்று இதுதான்டா போலீஸ். இந்தப் படங்களின் வசூலை இன்னதுதான் என்றே வகைப்படுத்தவே முடியாது. ஓர் ஊர்கூட விதிவிலக்கில்லை என்னும்படி திரையரங்குகள் நிரம்பி வழிந்தன. அதன்பின் விஜயசாந்தி நடித்த படங்களும் இராஜசேகர் நடித்த படங்களும் அடுத்த ஐந்தாறாண்டுகள் வெளியாகிக்கொண்டே இருந்தன. ஒரு படவெற்றி அந்நாயகர்க்கு அடுத்த நாற்பது படங்களுக்கு இங்கே சந்தையைத் திறந்துவிட்டது. விஜயசாந்தியின் 'வைஜெயந்தி ஐபிஎஸ்'வரை அவருடைய ஆதிக்கம் இருந்தது. ராஜசேகருக்கு 'எவனா இருந்தா எனக்கென்ன...' வரை.

    இடையில் இன்னொருவகை நல்முயற்சிப் படங்களும் தமிழ்த் திரையுலகை உலுக்கின. ஒன்று மணிரத்னத்தின் 'இதயத்தைத் திருடாதே'. இன்னொன்று ராம்கோபால் வர்மாவின் 'உதயம்'. இவ்விரண்டு படங்களையும் மொழிமாற்றுப் படங்கள் என்று யாருமே சொல்லமுடியாது. பாத்திரங்கள் குறைவாய்ப் பேசியது ஒரு காரணமாக இருக்கலாம். திரைமொழி என்னும் காட்சிச் சட்டகத்தின் அருமையை உணர்ந்து அதன்வழியே எடுக்கப்பட்ட படங்கள் அவை. இரண்டிலும் நம் மண்ணுக்கு உகந்த இளையராஜாவின் இசைவேறு. உதயத்தில் எதிர்நாயகன் ரகுவரனுக்கு அவருடைய சொந்தக் குரலையே பயன்படுத்தினார்கள் என நினைக்கிறேன். இதயத்திலும் உதயத்திலும் நாகார்ச்சுனருக்கு நடிகர் சுரேஷ் பின்னணிக்குரல். இதயத்தைத் திருடாதேவும் உதயமும் தமிழ்நாட்டு இளைஞர்களைப் பித்தர்களாக்கின என்றே சொல்லவேண்டும். இந்தப் போக்குகளுக்கு நடுவில் வெளியாகி வெற்றியும் பெற்ற அரிய திரைப்படங்களான 'சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து' ஆகிய படங்களையும் குறிப்பிட்டாகவேண்டும்.

    தொண்ணூறுகளில் தமிழ்த் திரைப்படங்கள் பெருஞ்செலவு ஆக்கங்கள் என்ற திசையில் நடைபோடவே தெலுங்குப் படங்கள் மட்டுப்பட்டன. அந்தப்புரம் போன்ற படங்கள் அவ்வப்போது வந்தன. தெலுங்கில் வெற்றி பெற்ற கதைகள் தமிழில் புதிதாகவே எடுக்கும் போக்கு தொடங்கியது. நினைத்தேன் வந்தாய், கில்லி உட்பட பல படங்கள் அவ்வாறு உருவாகி வெற்றிபெற்றவை. வெற்றி பெற்ற தெலுங்குப் படங்களின் கதையுரிமையைப் பெற்று இங்கே தம் நாயகத் தோற்றத்தை வடித்துக்கொண்டவர்கள் பலர்.

    இப்படிப்பட்ட பல்வேறு கிளைகளின் தொடர்ச்சியாய்த்தான் தமிழ்ச் சூழலில் தெலுங்குத் திரைப்பட மேலாட்சியை விளங்கிக்கொள்ள வேண்டும். தெலுங்குத் திரையுலகின் அடிப்படையாய் இயங்கும் நாட்டார் தன்மையுள்ள கூத்துக் கூறுகளும் பிரமாண்டமும் சேர்ந்துதான் இன்றைய பாகுபலிவரை வந்திருக்கிறது.

    அந்தக் காலக் கறுப்பு வெள்ளை மொழிமாற்றுப் படங்கள் முதல் இடைக்காலத்தின் பெருவெற்றிப் படங்கள் தொட்டு இதுநாள்வரை நிகழ்ந்த திரைக்கதைப் பரிமாற்றங்கள் வழியாக எட்டப்பட்ட தெலுங்குத் திரைக்கதையுலகின் 'களிகூறுகள் மிக்குள்ள கனவுக்கதைத்தன்மை' பாகுபலியில் அறுவடை செய்யப்பட்டிருக்கிறது.

    இந்தப் போக்கு பெரும் பொருட்செலவோடு தொடர்புடையது என்பதால் தொடர்வதற்கு வாய்ப்பேயில்லை. ஒரு தோல்வியின் பின் இத்தகைய போக்குகள் கைவிடப்படக்கூடும். அப்போது மண்சார்ந்த, மக்கள் சார்ந்த கதைகளோடுதான் மீண்டும் வரவேண்டும். நம் திரைக்கலையானது அறிவியல் வளர்ச்சியோடும் சந்தை வளர்ச்சியோடும் உரிய விகிதத்தில் சேர்ந்தே வளர்கிறது என்பதே இதில் மகிழத்தக்க செய்தி.

    English summary
    Poet Magudeswaran's special article on the commercial success of Baahubali series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X