மாணிக்க விநாயகம் மறைவு.. குடும்பத்திற்கு நாம் ஆறுதல் சொல்லலாம்.. இசைக்கு? கவிஞர் வைரமுத்து உருக்கம்!
சென்னை: பிரபல பின்னணி பாடகரான மாணிக்க விநாயகம் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
2001-ம் ஆண்டு வெளியான 'தில்' திரைப்படத்தில் 'கண்ணுக்குள்ள ஒருத்தி' என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பாடகர் மாணிக்க விநாயகம்.
தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். திரைப் பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார்.

மயிலாடுதுறையை பூர்விகமாக கொண்டவர்
தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி, சரத்குமார் நடிப்பில் கம்பீரம், கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன், சூர்யா நடிப்பில் வெளியான பேரழகன், விஷாலின் திமிரு, விஜய்யின் வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். மயிலாடுதுறையை அடுத்த வழுவூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.

நேற்று காலமானார்
இவர் பழம்பெரும் பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகன் ஆவார். 78 வயதான மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் உட்பட திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எவர் சொல்வது இசைக்கு...?
இந்த வகையில் கவிஞர் வைரமுத்து பாடகர் மாணிக்க விநாயகத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
இசை மரபிலே வந்த
மாணிக்க விநாயகம்
மறைந்துற்றார்
"விடைகொடு எங்கள் நாடே"
என்று பாடியவர் விடைபெற்றார்
நல்ல கலைஞன் - நல்ல மனிதன்
என்று இரண்டும் கூடிய
அபூர்வம் அவர்
குடும்பத்திற்கு
நாம் ஆறுதல் சொல்லலாம்
எவர் சொல்வது இசைக்கு...? என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பசை பாடமல் பறந்துபோனதோ!
அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் மாணிக்க விநாயகத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி இந்த நெட்டிசன் பதிவிட்டிருப்பதாவது, இசை மாணிக்கமே!- உன்
அசை துறந்ததே... கண்
திசை திரிந்த உயிரிசை
பசை பாடமல் பறந்துபோனதோ! என குறிப்பிட்டுள்ளார்.

வெண்கலக் குரல்
மற்றொரு ரசிகரான இவரும் பாடகர் மாணிக்க விநாயகத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், வெண்கலக் குரல் மூலம் தமிழ் முழக்கமிட்ட இசைவாணருக்கு புகழஞ்சலி... என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











