எந்த வயதிலும் காதல் வரலாம்.. முதல் அனுபவம் வாழ்க.. கவிஞர் வைரமுத்து காதலர் தினம் வாழ்த்து
சென்னை : "துன்பம் குழைத்த இன்பம்தான் காதல்" என்று கவிப்பேரரசு வைரமுத்து காதலர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 14ந் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் மட்டுமே சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்த வேலன்டைன்ஸ் டே, மெல்ல மெல்ல நம் நாட்டில் ஊடுருவி இன்று காதலர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

காதலர் தினம் ஸ்பெஷல்
"காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்" பல இளசுகள் தங்கள் மனதிற்குள் புதைத்து வைத்த காதலை தைரியமாக காதலி முன் சொல்வதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்த நாள் தான், வேலன்டைன்ஸ் டே என்னும் காதலர் தினம்.

சிவப்பு ரோஜா போதும்
பிப்ரவரி மாதம் தொடங்கியதுமே காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாட தயாராகி விடுகிறார்கள். ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, பிராமிஸ் டே, கிஸ் டே, ஹக் டே என்ற வரிசையில் கடைசியாக வருகிறது வேலன்டைன்ஸ் டே. இந்த நாளில் மனதிற்கு பிடித்த காதலனுகோ, காதலிக்கோ பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து தங்கள் எல்லை இல்லா அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். விலை உயர்ந்த பரிசைவிட ஒற்றை சிவப்பு ரோஜாவே காதலர்களுக்கு பிடித்தமான ஒன்று.

பிரபலங்கள் வாழ்த்து
அதே போல காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில், காதலால் மனம் லயித்துப்போன விண்ணைத்தாண்டி வருவாயா, மின்னலே, பிரேமம், ஹிருதயம், டைட்டானிக் போன்ற படங்கள் இன்று திரையரங்கில் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. காதலர் தினத்தை திரைப்பிரபலங்கள் பலர் அழகான புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.

துன்பம் குழைத்த இன்பம்தான் காதல்
அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், எந்த நிலையிலும் வரலாம், எந்த வயதிலும் வரலாம். அது ஒன்றல்ல ஒன்றிரண்டு மூன்று நான்கென்று எண்ணிக்கை ஏறலாம், ஆனால், என்னதான் அது என்ற இருதயத் துடிப்புக்கும், எப்போதுதான் நேரும் என்ற உடலின் தவிப்புக்கும் இடைவெளியில் நேருகின்ற துன்பம் குழைத்த இன்பம்தான் காதல், அந்த முதல் அனுபவம் வாழ்க என அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











