விலகுமா மர்மம்.. அறைக்கு வந்தவர்கள் யார்? ஹோட்டல் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீஸ்!
சென்னை: நடிகை சித்ரா இறப்பதற்கு முன்பு அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Recommended Video
பிரபல விஜேவும் சீரியல் நடிகையுமான சித்ராவின் மரணம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் உலுக்கியுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொழிலதிபரான ஹோம்நாத்தை பதிவு திருமணம் செய்த சித்ரா, அடுத்த மாதம் விமர்சையாக திருமணம் செய்ய இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்கள் கண்ணீர்
ரசிகர்கள், சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் சித்ராவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை பிரபலங்கள் பலரும் இப்படி அவசரப்பட்டுட்டீங்களே என்று கண்ணீர்விட்டு வருகின்றனர்.

கணவருடன் இருந்தபோது..
கணவர் ஹேம்நாத்துடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த சித்ரா, அவரை வெளியே அனுப்பிவிட்டு ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவரான ஹேம்நாத் கூறியுள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு இந்த சம்பவம் அரங்கேறியது.

இரண்டாவது நாளாக..
ஆனால் சித்ராவின் தாடை மற்றும் கன்னத்தில் நகக் கீரல்களும் காயங்களும் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக் சித்ராவுடன் இருந்த கணவர் ஹேம்நாத்திடம் இரண்டாவது நாளாக போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையா?
சித்ரா உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சித்ரா தங்கியிருந்த நசரத்பேட்டை நட்சத்திர ஹோட்டலுக்கு நள்ளிரவில் வந்து சென்றவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள்
இதுதொடர்பாக ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சித்ரா மரணத்திற்கு முன்பு அவரது அறைக்கு வந்தவர்கள் யார் என்றும் ஹோட்டல் ஊழியர்களிடம் போலீசார் இரண்டாவது நாளாக விசாரித்து வருகின்றனர்.

மர்மங்கள் விலகும்
இதனிடையே சித்ராவின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு உடல் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. சித்ராவின் உடற்கூராய்வு அறிக்கை வெளிவரும் பட்சத்தில் அவரது மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











