Vijay: பால் பாக்கெட்.. திருந்தாத விஜய் ரசிகர்களுக்கு விழுந்த அடி.. விஜய்க்கு தொடர்ந்து அவப்பெயர்!
மதுரை: நடிகர் விஜய் தற்போது தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியைச் சேர்ந்தவர்கள் செய்யும் அலப்பறைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அவர்களின் சேட்டை ஓவராக மாறியதால் மதுரையில் காவலர்களிடம் தர்ம அடி வாங்கியுள்ளார்கள் விஜய் ரசிகர்கள். இன்னும் சொல்லப்போனால் இதனால் விஜய்க்குத்தான் அவரது ரசிகர்கள் அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்கள்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், அவரது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள், அவரது கட்சியில் இணைந்தார்கள். இது விஜய்க்கு ஒரு வகையில் மக்கள் செல்வாக்கைப் பெற்றுத் தரும் விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த விஷயம் தான் அவருக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இது தொடர்பாக தவெகவில் உயர் பொறுப்பில் இருக்கும் பொறுப்பாளர்கள் தொடங்கி, தலைவராக உள்ள விஜய் வரை பலரும் சொல்லியும் திருந்தாத ஜென்மங்களாக உள்ளார்கள், திருந்தாத ஜென்மங்களாக நடந்து கொள்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
நடிகர் விஜய்க்கு ரசிகர்களாக கோடிக்கணக்கானோர் உள்ளார்கள். விஜய், அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் அவர் நடத்திய முதல் மாநாட்டில் இருந்து, இன்று அதாவது மே 1ஆம் தேதி மதுரையில் நடத்திய ரோடு ஷோ வரை விஜய் ரசிகர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்கள் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களுக்கும் தவெகவிற்கும் இன்னும் சொல்லப்போனால் விஜய்க்கும் அவப்பெயரை ஈட்டித் தருகிறார்கள், என்றுதான் கூறவேண்டும்.

கண்டிப்பு: மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத விளக்குகளின் கம்பங்கள் மீதும், திரைகளின் கம்பங்கள் மீதும் ஏறி அலப்பறை செய்த விஜய் ரசிகர்களை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாட்டு மேடையில் கண்டித்தார். ஆனால், விஜய் ரசிகர்களுக்கு விஜய்யை பார்த்து விட வேண்டும் எனும் ஆர்வத்தினால் செய்யும் ஆர்வக் கோளாறான விஷயங்கள் பலருக்கும் அச்சத்தையும் தொல்லைகளையும் உண்டாக்குகிறது.
ஆர்வக்கோளாறு ரசிகர்கள்: இது தொடர்பாக நடிகரும் தவெக தலைவருமான விஜய் மதுரையில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, மிகவும் வருத்தத்துடன் பேசியிருந்தார். ஆனால் மதுரையில் விஜய் ரசிகர்கள் செய்த செயல், பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லை என்பதை உணர்த்துவதாக பலரும் கூறுகிறார்கள். அதே நேரத்தில் சிலர் செய்யும் தவறினால் மொத்த ரசிகர்களுக்கும் கெட்டப் பெயர் எனவும் கூறுகிறார்கள்.
அடிப்படை அறிவு இல்லாத: விஜய், இன்று மதுரையில் ரோடு ஷோ நடத்தினார். விஜய்யை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தார்கள். இதில் சில ரசிகர்கள் விஜய்க்கு பூசணிக்காய் உடைக்க வேண்டும் எனவும் அவருக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும் எனவும் கையில் பூசணிக்காய் உடனும் பால் பாக்கெட் உடனும் வந்திருந்தார்கள். பூசணிக்காயை வைத்துள்ள ரசிகர், அவ்வளவு கூட்ட நெரிசலிலும் அதை உடைக்க முயற்சி செய்கிறார். அதை உடைத்தால், அதனால் யாராவது வழுக்கி விழுந்து கூட்ட நெரிசலில் காயம் பட வாய்ப்புள்ளது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் நடந்து கொண்டார்.

அவப்பெயர்: அதேபோல் கையில் பால் பாக்கெட் உடன் வந்த ரசிகர்கள் அதனை உடைத்து விஜய் வந்த வாகனத்தை நோக்கி பீச்சி அடித்தார்கள். சிலர் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் மீது பீச்சி அடித்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த காவலர்களில் சிலர் விஜய் ரசிகர்களுக்கு ஊமைக் குத்து கொடுத்து, அங்கிருந்து விலகினர். இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரோடு ஷோவிற்கு வரும் விஜய் மீது பாலை ஊற்ற வேண்டும் என பால் பாக்கெட்டுடன் வந்த ரசிகர்களின் அன்பு ஒருபுறம் இருந்தாலும், இடம், பொருள், ஏவல் தெரியாத அளவிற்கு இருப்பார்களா என பலரும் விஜய் ரசிகர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இது போன்ற சில அடிப்படை அறிவற்ற ரசிகர்களால், விஜய்க்கு தான் கெட்டப் பெயர் எனவும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











