ரூ. 20 லட்சம் வாடகை பாக்கி.. சத்தமே இல்லாமல் வீட்டை காலி செய்த யுவன்? புகார் கொடுத்த ஹவுஸ் ஓனர்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தனது இளம் வயதில் இருந்து திரப்படங்களுக்கு இசை அமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா சுமார் 130க்கும் அதிகமான படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் இசைக் கச்சேரிகள் வைத்து, ரசிகர்களுக்கு ட்ரீட்டும் கொடுத்து வருகின்றார். அண்மையில் சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் லாங் ட்ரைவ் என்ற இசைக் கச்சேரியை நடத்தினார். இந்நிலையில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் அடுத்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் படம் வெளியாகவுள்ளது. சென்னை நுங்கம் பாக்கம் பகுதியில் வசித்து வந்த யுவன் சங்கர் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் வசித்து வந்த வீட்டுக்கு ரூ.20 லட்சம் வாடகை பணம் செலுத்தாமல் இரவோடு இரவாக வீட்டை காலி செய்ய முயற்சிப்பதாக சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியாவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்த வீட்டிற்கான வாடகையை முறையாக செலுத்தாமல் இருந்து வந்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. இதனால்தான் வீட்டின் உரிமையாளர் தரப்பில் இருந்து சென்னை காவல் நிலையத்தில் யுவன் சங்கர் ராஜா மீது பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார்:அதாவது, நுங்கம் பாக்கத்தில் யுவன் சங்கர் ராஜா வசித்து வந்த வாடகை வீடு என்பது அஜ்மத் பேகம் என்பவருக்கு சொந்தமானது. இந்நிலையில் தான் அஜ்மத் பேகத்தின் சகோதரர் முகமது ஜாவித் என்பவர் யுவன் சங்கர் ராஜா மீது திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் அதன் பின்னர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரூ.20 லட்சம்: அந்த புகாரில், ‛‛கடந்த 2 ஆண்டுகளாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த வீடு எனது சகோதரிக்கு சொந்தமானது. இந்த வீட்டுக்கு யுவன் சங்கர் ராஜா ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தார். வாடகையை எனது சகோதரி கேட்கும்போதெல்லாம் யுவன் சங்கர் ராஜா எதாவது கூறி மறுத்து பேசி வந்துள்ளார்.

வாடகை பாக்கி: நான் வாடகை பணம் கேட்க போன் செய்தபோதும் அவர் செல்போனை எடுக்கவில்லை. தற்போது அவர் எந்த தகவலும் சொல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூறினார்கள். நேற்றும், இன்றும் வீட்டில் உள்ள பொருட்கள் வெளியே எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதனால் புகார் தொடர்பாக விசாரித்து யுவன் சங்கராஜாவிடம் வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிர்ச்சி: இந்த புகாரை தொடர்ந்து காவல் துறையினர் விசாரணைை தொடங்கி உள்ளனர். தற்போது வரை யுவன் சங்கர் ராஜா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. யுவன் சங்கர் ராஜா மீது காவல் துறையில் வாடகை பாக்கி தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











