இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல...வலிமை படத்திற்கு தடை கேட்டு போலீசில் புகார்
சென்னை : பெரிய நடிகர்களின் படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தடை கேட்டு போலீசில் புகார் அளிப்பது, வழக்கு தொடுப்பது சமீப காலமாக டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த வரிசையில் லேட்டஸ்டாக அஜித்தின் வலிமை படத்திற்கும் தடை கேட்டு போலீசில் புகார் அளித்து, பரபரப்பை கிளப்பி உள்ளனர்.
நீண்ட போராட்டம், தடைகளை தாண்டி கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் ரசிகர்களின் காத்திருப்பிற்கு பிறகு அஜித்தின் வலிமை படத்தை பிப்ரவரி 24 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளனர். திரும்பிய பக்கமெல்லாம் வலிமை கொண்டாட்டமாக இருந்து வருகிறது. கிட்டதட்ட 1000 தியேட்டர்களில் தமிழகத்தில் மட்டும் வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் போர்டையே பார்க்க முடிகிறது.

வசூல் வேட்டை நடத்தும் வலிமை
ரிலீசான 3 நாட்களிலேயே 100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்துள்ளது வலிமை படம். இதுவரை தமிழகத்தில் வெளிவந்த படங்களிலேயே முதல் நாளிலேயே மிக அதிகமான தொகையை வசூலித்த படங்களின் லிஸ்ட்டில் வலிமை தான் முதலிடத்தில் உள்ளது. ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால் வலிமை படத்தில் 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு, ரன்னிங் டைம் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டு, திரையிடப்பட்டு வருகிறது. எப்படி இருந்தாலும் ரசிகர்கள் வலிமை படத்தை உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். நெகடிவ் விமர்சனங்களை கடந்து பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பி வருகிறது வலிமை.

அட ஆமாம்ப்பா இத கவனிக்கலியே
வலிமை படத்தின் பாசிடிவ் விஷயங்களை தேடிப்பிடித்து தொடர்ந்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். பக்கா ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் வலிமை படத்தில் சாரா கேரக்டர் தவிர வேறு யாரும் உயிரிழப்பதை போல் காட்டப்படவில்லை. அதுவும் கூட அஜித்தின் தம்பியாக வரும் ராஜ் ஐயப்பா தவறுதலாக சுட்டதாலேயே சாரா உயிரிழப்பதாக காட்டப்பட்டிருக்கும். ஆக்ஷன் படமாக இருந்தாலும் ரத்த தெறிப்பு காட்சிகள் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் பெரிய ப்ளசாக பாராட்டி வருகின்றனர்.

வலிமைக்கு எதிராக போலீசில் புகார்
ஆனால் வலிமை படத்தை தடை செய்ய வேண்டும் என பெண் வழக்கறிஞர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கறிஞர் சாந்தி என்பவர் அளித்துள்ள புகார் மனுவில், பிப்ரவரி 25ம் தேதி குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று வலிமை படம் பார்த்தேன். படத்தின் துவக்க காட்சியிலேயே வழக்கறிஞர்களை குற்றவாளிகளை போல் சித்தரித்தும், குற்றச் செயல் புரியும் குண்டர்களாக வழக்கறிஞர்கள் செயல்படுவது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

வலிமைக்கு தடை விதிக்கனும்
இது போன்ற காட்சிகள் அதிர்ச்சி அளிக்கிறது. சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு பணியை ஆற்றி வரும் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தி காட்சியமைப்பதும் , ஒரு சில வழக்கறிஞர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட, ஒட்டுமொத்த வழக்கறிஞர்களையும் தவறாக காட்டுவதும் கண்டனத்திற்குரியது. படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் அல்லது வலிமை படத்தை தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என போலீசாரும் உறுதி அளித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











