வீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா? நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்
மணப்பாறை: வழிபாட்டு தலத்தை இடித்ததாக நடிகர் விமல் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பசங்க, களவாணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் விமல்.
பூபதி பாண்டியன் இயக்கிய மன்னர் வகையறா என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து வெளியிட்டார்.

பண்ணாங்கொம்பு
கடைசியாக, அவர் நடித்து கன்னிராசி என்ற படம் வெளியானது. இதை முத்துக்குமரன் இயக்கி இருந்தார். இதில் வரலட்சுமி, பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்திருந்தனர். அடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். விமலுக்கு, திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பண்ணாங்கொம்பு சொந்த ஊர்.

விளக்குத் தூண்
இந்த ஊரில் அவரது வீட்டுக்கு முன் சுமார் 100 மீட்டர் தூரத்தில், ஊர் மந்தை இருக்கிறது. அங்கு அந்தப் பகுதியினர் விளக்குத் தூண் அமைத்து வழிபட்டு வந்தனர். இந்த இடத்தில் 48 நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்தவர்கள் 2 அடிக்கு சுவர் எழுப்பி, மேடை அமைத்திருந்தனர்.

தரை மட்டமாக்கியது
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 பேர் கொண்ட ஒரு கும்பல் ஜேசிபி இயந்திரத்துடன் வந்து அந்த விளக்குத்தூண் மேடையை இடித்து தரை மட்டமாக்கியது. இதை தட்டிக் கேட்ட அப்பகுதியினரையும் அந்தக் கும்பல் மிரட்டியதாகவும், இந்த கும்பலில் நடிகர் விமலும் இருந்தார் எனவும் கூறப்படுகிறது.

போலீசில் புகார்
இதுபற்றி அதே ஊரை சேர்ந்த பூசாரி செல்வம் என்பவர் புத்தாநத்தம் போலீசில் புகார் செய்தார். மணப்பாறை டிஎஸ்பி பிருந்தா விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் விசாரணைக்காக போலீசார் விமலை அழைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











