விஜய்யின் காவலன் விநியோக விவகாரம்.. இயக்குனர் ஷக்தி சிதம்பரம் மீது பண மோசடி வழக்கு!
சென்னை: பண மோசடியில் ஈடுபட்டதாக, இயக்குனர் சக்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபு நடித்த சார்லி சாப்ளின், சத்யராஜ் நடித்த கோவை பிரதர்ஸ், இங்கிலீஸ்காரன், மகாநடிகன் உட்பட சில படங்களை இயக்கியவர், ஷக்தி சிதம்பரம்.
இப்போது யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் பேய் மாமா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

காவலன் விநியோகம்
இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையே, நடிகர் விஜய்யின் காவலன் பட விநியோகம் தொடர்பான கடன் பிரச்னையில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. விஜய் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம், காவலன். இதை சித்திக் இயக்கி இருந்தார்.

கொடுக்கவில்லை
இது மலையாளத்தில் ஹிட்டான பாடிகார்ட் என்ற படத்தின் தமிழ் ரீமேக். இதில் அசின் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படத்தை விநியோகம் செய்ய, அடையாறை சேர்ந்த சுந்தர் என்பவரிடம், ரூ.23 லட்சம் பெற்றிருந்தார் ஷக்தி சிதம்பரம். இந்தப் பணத்தை 10 ஆண்டுகளாக திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஏமாற்றி விட்டார்
இதுகுறித்து, கடந்த செப்டம்பர் மாதம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், சுந்தர் புகார் அளித்தார். அதில், காவலன் படத்தை இருவரும் இணைந்து தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யலாம் என்று என்னிடம் பணம் கேட்டார். நான் ரூ.23 லட்சம் கொடுத்தேன். ஆனால், விநியோக உரிமையை பெற்றுத்தராமல் ஏமாற்றிவிட்டார்.

கொலை மிரட்டல்
பணத்தைத் திருப்பிக் கேட்டேன். அவர் 5 காசோலைகள் கொடுத்தார். அவை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதுபற்றி கேட்டபோது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து என் பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

பண மோசடி
விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் சுந்தர் வழக்குத் தொடர்ந்தார். தற்போது, நீதிமன்ற உத்தரவுப்படி, இயக்குனர் ஷக்தி சிதம்பரம் மீது, விருகம்பாக்கம் போலீசார், பண மோசடி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











