நாட்டில் வெறுப்பை விதைப்பதா? சகோதரிக்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகை மீது போலீசில் பரபரப்பு புகார்
மும்பை: தனது சகோதரிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த பிரபல நடிகைக்கு எதிராக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தவர், பிரபல இந்தி நடிகை கங்கனா ரனவத்.
இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார். இதை விஜய் இயக்குகிறார்.

சகோதரி ரங்கோலி
இந்தி சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதுகளை பெற்றவர் கங்கனா. இவர் சகோதரி ரங்கோலி சண்டல். கங்கனாவும் அவரது சகோதரி ரங்கோலியும் பாஜக ஆதரவாளர்கள். ரங்கோலி, அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிடுவது வழக்கம்.

சர்ச்சை கருத்து
சில சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளாவதும் நடக்கும். இந்நிலையில் சமீபத்தில் அவர் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மொராதாபாத்தில் கொரோனா வைரஸ் சோதனைக்காகச் சென்ற சுகாதாரத்துறை பணியாளர்கள், காவலர்கள் தாக்கப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடும் கண்டனம்
இதுகுறித்து ரங்கோலி கடுமையாக விமர்சித்து ட்விட் செய்திருந்தார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தாக்கிப் பதிவிட்டதாக, புகார் எழுந்தது. இதையடுத்து சினிமா பிரபலங்கள், நெட்டிசன்கள் அவரது ட்விட்டுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரை அடுத்து ரங்கோலியின் கணக்கை ட்விட்டர் நிறுவனம் சஸ்பெண்ட் செய்தது.

கங்கனா ரனவத்
இந்நிலையில், தனது சகோதரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் கங்கனா. என் சகோதரி டாக்டரையும் போலீசாரையும் தாக்கியவர்களைச் சுட்டுக்கொல்ல வேண்டும் என்றுதான் கூறியிருந்தார். அவர் மீது தவறான குற்றச்சாட்டை வைத்துவிட்டனர். எந்த சமூகத்துக்கு எதிராகவும் அவர் கருத்துச் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால், நாங்கள் மன்னிப்புக் கேட்போம் என்று கூறி இருந்தார்.

புகழைப் பயன்படுத்தி
இந்நிலையில் மும்பையை சேர்ந்த அலி காஷிஃப் கான் தேஷ்முக் என்ற வழக்கறிஞர், போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ஒரு சகோதரி கொலைகளுக்கும் வன்முறைக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த சகோதரி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சொந்த ஆதாயங்களுக்காக, தனது புகழைப் பயன்படுத்தி நாட்டில் வெறுப்பை விதைக்கிறார், ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறார், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











