இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான விவகாரம்.. இயக்குநர் ஷங்கர், நடிகர் கமலுக்கு போலீஸ் சம்மன்!
Recommended Video
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்திருக்கின்றனர்.
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு லைட்டுகளை செட் செய்யும் பணி நடைபெற்றது.
இரவை பகல் போல் காட்டி படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக உயரமான கிரேன்களில் ராட்சத லைட்டுகள் கட்டப்பட்டன.

சினிமா தொழிலாளர்
அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, புரடெக்ஷன் உதவியாளர் மது, ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் சினிமா தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்குப்பதிவு
இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீதும் தயாரிப்பு நிர்வாகி மீதும் 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் கிரேன் ஆபரேட்டர், கிரேன் உரிமையாளர், புரொடக்ஷன் மேனேஜர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்மன் அனுப்ப முடிவு
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப நசரத் பேட்டை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதேபோல் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறும் 10 பேருக்கும் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்திருக்கின்றனர்.

போலீசார் திட்டம்
விபத்து குறித்தும் விபத்து நடந்தது எப்படி என்பது குறித்தும் ஷங்கர், கமல் மற்றும் காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே இந்தியன் 2 படப்பிடிப்பில் மரணமடைந்த 3 பேருக்கும் சென்னையில் உள்ள திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications











