Bigboss Vikraman - பிக்பாஸ் விக்ரமன் மீது காவல் துறை நடவடிக்கை?.. பரபரக்கவைக்கும் தகவல்
சென்னை: Bigboss Vikraman (பிக்பாஸ் விக்ரமன்) பிக்பாஸ் விக்ரமன் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் விக்ரமன். ஊடகவியலாளரான அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பொறுப்பிலும் இருக்கிறார். பிக்பாஸில் அசீமுக்கும் இவருக்கும் நடந்த பல மோதல்களில் விக்ரமனின் செயல்பாடு பரவலான பாராட்டை பெற்றது. குறிப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலேகூட விக்ரமனை பல முறை பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அறம் வெல்லும்: அந்த நிகழ்ச்சியில் அடிக்கடி விக்ரமன் பயன்படுத்திய வார்த்தை அறம் வெல்லும். இதன் காரணமாக அவர்தான் பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அசீம் தட்டி தூக்கிவிட்டார். இருந்தாலும் விக்ரமன் மக்கள் மனங்களை வென்றுவிட்டார் என அவரது ரசிகர்கள் கூறினர். இந்தச் சூழலில் விக்ரமன் மீது கிருபா முனுசாமி என்ற பெண்மணி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
என்ன குற்றச்சாட்டு?: விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார். பணத்தையும் ஏமாற்றிவிட்டதாக கூறி சில ஸ்க்ரீன் ஷாட்டுகளை பகிர்ந்திருந்தார். மேலும் அதில் ஒரு ஸ்க்ரீன் ஷாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை குறித்தும் விக்ரமன் தவறாக பேசியதுபோல் இருந்தது.
விக்ரமன் விளக்கம்: இதற்கிடையே கிருபா முனுசாமி விவகாரம் தொடர்பாக விக்ரமன் அளித்த விளக்கத்தில், "என் மீது கிருபா முனுசாமி என்பவர் கிளப்பி உள்ள அத்தனை குற்றச்சாட்டுக்களையும் மறுக்கிறேன். ஒரு நாணயம் என்றிருந்தால் அதற்கு இரண்டு பக்கம் இருக்கும். எனது பக்கத்தையும் கேளுங்கள், இதில், பாதிக்கப்பட்டவன் என்றால் அது நான் மட்டும் தான். என் மீது பழி சுமத்த வேண்டும் என்றே கிருபா இப்படியெல்லாம் செய்கிறார்
2020ல் நாங்கள் இருவரும் பழகினோம். அவர் பிஎச்டி படிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது அவரிடம் எனது தேவைகளுக்காக பணம் வாங்கியது உண்மை தான். ஆனால், அவருக்கு வாக்கு கொடுத்ததை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அதில், கிடைத்த பணத்தையும் திருப்பி தந்துவிட்டேன் என கூறி; பணத்தை திருப்பி கொடுத்ததற்கான ஆதாரத்தையும் அதில் இணைத்திருந்தார்.
புகார்: கிருபா முனுசாமிக்கு ஆதரவு குரல்கள் எழுந்தாலும் எதற்காக அவர் காவல் துறையில் இதுகுறித்து புகார் அளிக்கவில்லை. கட்சியில் மட்டும் புகார் அளித்திருக்கிறார். எனவே இதில் உள்நோக்கம் இருக்கிறது என ஒருதரப்பினர் கூறினர். இந்தச் சூழலில் கிருபா முனுசாமி விக்ரமன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
நடவடிக்கை?: இதனையடுத்து கிருபா அளித்த புகாரின் அடிப்படையில் விக்ரமனிடம் விரைவில் காவல் துறையினர் விசாரிக்கவிருப்பதாகவும்; குற்றம் இருக்கும்பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை முடிவு செய்திருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விக்ரமன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











