கொடைக்கானல் விவகாரம்.. நடிகர் பாபி சிம்ஹா மீது வழக்குப்பதிவு.. நடந்தது என்ன?
கொடைக்கானல்: கொடைக்கானலில் நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் நடிகர்கள் பாபி சிம்ஹா, கேஜிஎப் வில்லன் நடிகர் ராமசந்திர ராஜு உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீட்சா , ஜிகர்தண்டா, சூது கவ்வும், பேட்ட, இறைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் பாபி சிம்ஹா.
இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா படத்தில் சிறந்த வில்லனாக நடித்ததற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

நடிகர் பாபி சிம்ஹா: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபி சிம்ஹாவிற்கு 15 சென்ட் நிலம் சொந்தமாக இருக்கிறது. இதில் அவர் வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டிடப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் கொடைக்கானலைச் சேர்ந்த ஒப்பந்ததாரரான ஜமீர் என்பவர் கவனித்து வந்தார்.
வீடுகட்டுவதில் பிரச்சனை: ஒப்பந்ததாரர் ஜமீரின் உறவினரான உஷேன்,பாபி சிம்ஹா இருவரும் பள்ளி நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்த கட்டிட பணிகள் 90 சதவிகித பணிகள் முடிவடைந்த நிலையில் ஒப்பந்ததாரரான ஜமீர் மற்று பாபி சிம்ஹா இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
4 பேர் மீது வழக்கு: இதனிடையே கடந்த மாதம் 20ந் தேதி பாபி சிம்ஹா,கேஜிஎப் படத்தின் வில்லன் நடிகர் ராமச்சந்திரா ராஜூ உட்பட நான்கு பேர் உசேனுக்கு சொந்தமான விடுதிக்கு வந்ததாகவும். அப்போது, உசேன் பாபி சிம்ஹாவிடம் அறிவுரை கூற முற்பட்ட போது வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தலையிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஒப்பந்ததாரரின் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பாபி சிம்ஹா எடுத்து சென்று கட்டிடத்திற்குள் வைத்துள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து விடுதியின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், பாபி சிம்ஹா, ராமச்சந்திர ராஜூ உட்பட நான்கு பேர் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











