Trisha: மன்சூர் அலிகானின் அவதூறு பேச்சு.. த்ரிஷாவிடம் விசாரணை நடத்த காவல்துறை திட்டம்!
சென்னை: த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில், இதுகுறித்து காவல்துறை த்ரிஷாவிடம் விசாரணை நடத்த உள்ளது.
கடந்த வாரம் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த த்ரிஷா, இனிமேல் இவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இதற்கு லோகேஷ் கனகராஜ், குஷ்பு, மாளவிகா மோகனன் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்கமாட்டேன்: சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளான இந்த விவகாரம் குறித்து பேசிய மன்சூர் அலிகான், நான் த்ரிஷா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை, நான் பேசியதை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். இதனால், மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று கூறியிருந்தார்.
இரண்டு பிரிவில் வழக்கு: இதையடுத்து. மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்ததை அடுத்து சென்னை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி அவருக்கு ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் சம்மன் அனுப்பினர். வழக்கு விசாரணைக்கு மன்சூர் அலிகான் ஆஜராகி இருந்தார்.
பகிரங்க மன்னிப்பு: இதையடுத்து, மன்சூர் அலிகான் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், "ஆம், அடக்க நினைத்தால் அடங்க மறு. இப்ப சொல்கிறேன் என்னை மன்னித்துவிடு. ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள்.
முடிந்தது கலிங்கப்போர்: கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்கானோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து. அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன். காவல் அதிகாரி த்ரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்' என வந்துவிட்டேன் என பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார்.
த்ரிஷா நச் பதில்: மன்சூர் அலிகானின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில் நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், "தவறு செய்வது மனிதம், மன்னிப்பது தெய்வீகம்" என்று கூறி கையெடுத்து கும்பிடும் இமோஜியை பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் பாராட்டினாலும் அப்படியென்றால் நீங்கள் தெய்வமா? இதெல்லாம் ரொம்ப ஒவர் என்று கலாய்த்து கமெண்ட்டுகளை பகிர்ந்து வருகிறார்கள்.
த்ரிஷாவிடம் விசாரணை: இந்நிலையில், மன்சூர் அலிகானின் அவதூறு பேச்சு தொடர்பாக ஆயிரம் விளக்கு காவல்துறை நடிகை த்ரிஷாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆயிரம் விளக்கு காவல்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











