சொகுசு வாழ்க்கை வாழ.. சொந்த வீட்டில் கணவரை திருட வைத்த தெய்வமகள் சீரியல் நடிகை.. போலீஸ் வலை!
சென்னை: சொகுசு வாழ்க்கை வாழ கணவரை சொந்த வீட்டிலேயே திருட திட்டம் தீட்டி கொடுத்த சீரியல் நடிகையை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுளுக்கு முன்பு சன் டிவியில் டாப் சீரியலாக இருந்தது தெய்வமகள் சீரியல். இந்த சீரியலில் அகிலா கேரக்டரில் நடித்தவர் சுசித்ரா.
இவரை சீரியல் படப்பிடிப்புக்கு அழைத்து சென்று வந்தவர் கார் டிரைவர் மணிகண்டன். இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு பகுதியை சேர்ந்த விவசாயி தேசிங்கு என்பவரின் மகன் ஆவார்.

கார் டிரைவர்
மணிகண்டன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு சென்னையில் நடிகைகளை ஷுட்டிங்குக்கு அழைத்து செல்லும் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

ரகசிய திருமணம்
அப்போதுதான் நடிகை சுசித்ராவுக்கும் மணிகண்டனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. வீட்டிற்கு தெரியாமல் சுசித்ராவை ரகசியமாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் மணிகண்டன். சுசித்ராவின் ஒரிஜினல் பெயர் பரமேஸ்வரி.

வருமானம் இல்லை
கடந்த சில மாதங்களாக லாக்டவுன் அமலில் உள்ளதால் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. இதனால் கணவன் மனைவி இருவரும் வருமானம் இன்றி தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது பெற்றோரை சந்திப்பதற்காக விநாயகர் சதுர்த்தியன்று மனைவியுடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார் மணிகண்டன்.

திட்டம் போட்ட நடிகை
அப்போது பீரோவில் பணம் மற்றும் நகை இருப்பதை பார்த்த சுசித்ரா, அவற்றை எடுத்து வந்தால் தான் ஹீரோயினாக நடிக்கும் குறும்படத்தை முடித்து, ரிலீஸ் செய்து விடலாம் என கணவருக்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து மனைவி சுசித்ராவை மீண்டும் சென்னையில் கொண்டுவந்து விட்டுவிட்டு மீண்டும் ஊருக்கு சென்றுள்ளார் மணிகண்டன்.

மகன் மீது சந்தேகம்
அப்போது பெற்றோர் தோட்டத்திற்கு செல்லும் வரை காத்திருந்த மணிகண்டன், அவர்கள் வெளியே சென்ற பிறகு பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு கிளம்பியுள்ளார். நகை மற்றும் பணம் கொள்ளை போனதை அறிந்த தேசிங்கு, தனது மகன் மீது தான் சந்தேகம் இருப்பதாக கூறி போலீஸில் புகார் அளித்தார்.

நடிகை தலைமறைவு
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கணவன் கைதான தகவலை அறிந்ததும் நடிகை சுசித்ரா தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த மனைவியை தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











