Vijayakanth - வீட்ல செம பிரச்னை.. விஜயகாந்த் என்ன செய்தார் தெரியுமா?.. உருகிய பொன்னம்பலம்
சென்னை: Vijayakanth (விஜயகாந்த்) விஜயகாந்த் குறித்து நடிகர் பொன்னம்பலம் உருக்கத்துடன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வில்லனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பொன்னம்பலம். ஆஜானுபாகுவான உடலும், வித்தியாசமான முக பாவனையும் என ஒரு காலத்தில் திரையுலகை கலக்கியவர் பொன்னம்பலம். இப்போது திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

அபூர்வ சகோதரர்களில் அறிமுகம்: சண்டைக் கலைஞராக இருந்த பொன்னம்பலம் கமல் ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் மூலம் முழு நேர நடிகராக அறிமுகமானார்.அதன் பிறகு வெற்றிவிழா, மைக்கேல் மதன காம ராஜன், நாட்டாமை, பெரிய மருது, மாநகர காவல் என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார்.
பிக்பாஸில் பொன்னம்பலம்: முன்னணி நடிகராக வலம் வந்த பொன்னம்பலத்துக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. இதனையடுத்து கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் கலந்துகொண்ட சீசனில் சிறப்பாகவே விளையாடினார். இருந்தாலும் அவரால் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல முடியவில்லை. எனினும், பிக்பாஸ் மூலம் மீண்டும் திரையுலகில் ஒரு ரவுண்டு வரலாம் என அவர் கணக்கு போட்டிருந்தார். ஆனால் அதுவும் பொய்த்துப்போனது.
உடல்நலக்குறைவு: சூழல் இப்படி இருக்க பொன்னம்பலத்துக்கு சிறுநீரகத்தில் பிரச்னை வந்தது. எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து உடல்நலம் தேறியது. தான் உடல்நலக்குறைவில் இருந்தபோது தனக்கு தனுஷும், சிரஞ்சீவியும் அதிக அளவு உதவியதாக பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருந்தார் பொன்னம்பலம்.
பொன்னம்பலம் பேட்டி: இந்நிலையில் பொன்னம்பலம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயகாந்த் குறித்து பேசியிருக்கிறார். செந்தூர பாண்டி படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசிய பொன்னம்பலம், "பட வாய்ப்புகள் குறைந்திருந்த நேரத்தில் செந்தூர பாண்டி படத்தில் கமிட்டானேன். அதன் பிறகு அந்தப் படம் தொடர்பாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். 50,000 ரூபாய் சம்பளம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.
வீட்டில் கஷ்டம்: எனவே நான் சார் வீட்ல ரொம்ப கஷ்டம் நல்ல சம்பளமாக கொடுங்கள் என்றேன். அதற்கு அவர் விஜயகாந்த் உனக்கு நல்ல சம்பளம் கொடுக்க சொல்லியிருக்கிறார். அது கவரில் இருக்கிறது. அக்ரிமெண்ட்டும் இருக்கிறது. நீ வீட்டில் போய் பிரித்து பார்த்துக்கொள் என்றார். வீட்டில் சென்று பார்த்தேன். ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் பணமாக மட்டும் இருந்தது. ஒப்பந்தத்தை பார்க்கும்போது அதில் எனது மொத்த சம்பளம் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் என இருந்தது. அதை வைத்து ஒரு வருடம் ஓட்டி விடலாம் என மகிழ்ச்சி அடைந்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











