பாகுபலியை விட பொன்னியின் செல்வன் 100 மடங்கு பெட்டர்... ட்விட்டரில் கம்பு சுத்தும் ரசிகர்கள்
சென்னை: கோலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் 2 இன்று வெளியானது.
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பாகுபலி படத்தை விடவும் பொன்னியின் செல்வன் தான் பெட்டர் என ரசிகர்கள் டிவிட்டரில் கம்பு சுத்தி வருகின்றனர்.

பாகுபலியை விட பொன்னியின் செல்வன் பெட்டர்:இலக்கிய வாசகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்ற பொன்னியின் செல்வன் நாவல், மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படம் ஆகிறது என்றதுமே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வரலாற்றுப் பின்னணிக் கொண்ட இந்த நாவலை மணிரத்னம் எப்படி படமாக எடுக்கப் போகிறார் என பலருக்கும் கேள்வி எழுந்தது.
ஆனால், அந்த கேள்விகளுக்கெல்லாம் கடந்தாண்டே பொன்னியின் செல்வன் முதல் பாகம் மூலம் பதில் கொடுத்தார் மணிரத்னம். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரிலீஸ் செய்து ரியலான சம்பவம் செய்துள்ளார். லைகா தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹோபிதா துலிபலா, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரஹ்மான், விக்ரம் பிரபு, ரியாஸ்கான், கிஷோர் என பெரும் நட்சத்திரப்பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் உருவானது குறித்து பேசியிருந்த மணிரத்னம், இந்தப் படம் உருவாக ராஜமெளலி தான் காரணம் எனக் கூறியிருந்தார்.

ராஜமெளலி இயக்கிய பாகுபலி தெலுங்கில் இருந்து பான் இந்தியா படமாக வெளியானது. 2015ம் ஆண்டு முதல் பாகமும், 2017ல் இரண்டாவது பாகமும் ரிலீஸானது. பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், ஹிஸ்டாரிக்கல் ஜானரில் உருவாகியிருந்தது. பிரம்மாண்டமான மேக்கிங், கிராபிக்ஸ், ஆக்ஷன் என எல்லாவிதத்திலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது பாகுபலி.
பாகுபலி கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவானது. ஆனால், பொன்னியின் செல்வன் கல்கியின் நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்த ரசிகர்கள், மணிரத்னத்தை புகழ்ந்து வருகின்றனர். முக்கியமாக பாகுபலியை விட பொன்னியின் செல்வன் 2 நூறு மடங்கு பெட்டர் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் திரைப்படம் எனவும், இது கோலிவுட்டின் பெருமை என்றும் கூறி வருகின்றனர். இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்துள்ள பொன்னியின் செல்வன் பாகுபலியை விட சிறப்பாக உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளனர். முன்னதாக பாகுபலி படத்தில் வரும் சிலையை மணிரத்னம் போல கிரியேட் செய்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்திருந்தனர்.
இதனைப் பார்த்த பாகுபலி ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தை கலாய்த்து வருகின்றனர். பாகுபலி வரவில்லை என்றால் மணிரத்னம் பொன்னியின் செல்வனை எடுத்திருக்கவே மாட்டார் எனவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஆனாலும் மணிரத்னம் ரசிகர்கள் விடாமல் பொன்னியின் செல்வன் படத்துக்கு ப்ரொமோஷன் செய்து வருவது ட்விட்டரை பரபரப்பாக்கியுள்ளது. ஆனாலும், பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸில் பாகுபலி படத்தின் சாதனையை முறியடிக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











